அரியானா மூத்த அமைச்சர் பதவி பறிப்பா? எக்ஸ் தள சுயவிவரத்தில் அமைச்சர் என்பதை நீக்கினார்
சண்டிகர்: அரியானாவின் எரிசக்தி துறை அமைச்சர் அனில் விஜ். பல துறைகளை வைத்திருக்கும் 72வயதாகும் பாஜ தலைவரான இவருக்கு எக்ஸ் தளத்தில் சுமார் 8 லட்சம் பேர் பின்தொடருபவர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் எக்ஸ் தளத்தில் உள்ள சுயவிவரத்தில் அனில் விஜ், அமைச்சர், அரியானா, இந்தியா என்று இருந்த தனது விவரத்தில் பெயருக்கு பின் இருந்த அமைச்சர் என்பதை நீக்கியுள்ளார். அதற்கு பதிலாக அனில் விஜ் அம்பாலா கான்ட் அரியானா, இந்தியா என்று மாற்றியுள்ளார்.
இதனால் அவரது பதவி பறிக்கப்படும் என்ற பரபரப்பு எழுந்துள்ளது. இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அனில் விஜ், ‘‘சமூக ஊடகங்களில் என்னை பின்தொடருபவர்களுக்கு நான் அமைச்சராக அல்ல. அனில் விஜ் என்று வளர்ப்பதற்கு விரும்புகிறேன். நான் அமைச்சராவதற்கு முன்பே சமூக ஊடக தளங்களில் பதிவு செய்தேன். மக்கள் என்னை அனில் விஜ் என்று அறிவார்கள். நான் பதிவிடும் உள்ளடக்கமும் அதை அடிப்படையாக கொண்டதுதான்” என்றார்.