அரியானா சட்டப்பேரவை தேர்தலில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
புதுடெல்லி: அரியானாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு, ஆட்சி திருட்டு நடந்திருப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆதாரங்களுடன் விளக்கி உள்ளார். 8 வாக்காளர்களில் ஒரு போலி வாக்காளரை சேர்த்து பாஜவுடன் தேர்தல் ஆணையம் கூட்டு சேர்ந்து சதி செய்திருப்பதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார். நாடு முழுவதும் பாஜவின் வெற்றிக்காக அக்கட்சிக்கு எதிரானவர்களின் வாக்குகள் வாக்காளர் பட்டியலில் திட்டமிட்டு நீக்கப்படுவதாகவும், போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுவதாகவும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
இதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கும் வகையில், கர்நாடகாவில் ஒரே தொகுதியில் 1 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது தொடர்பான ஆதாரங்களை ராகுல் காந்தி கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், பாஜவுடன் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து வாக்குகளை திருடவும், போலி வாக்காளர்களை பாதுகாக்கவும் சதி செய்வதாக கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,000 வாக்காளர்களை நீக்க நடந்த மோசடிகளையும் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் ஆதாரங்களுடன் நிரூபித்தார். இதைத் தொடர்ந்து, பாஜவின் வாக்கு திருட்டு தொடர்பாக ஹைட்ரஜன் குண்டை வீசப் போவதாக சமீபத்தில் எச்சரித்திருந்த ராகுல் காந்தி, டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து, அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் நடந்த தில்லுமுல்லுகளை ‘எச் பைல்ஸ்’ என்ற தலைப்பில் விரிவான ஆதாரங்களுடன் விளக்கினார்.
அப்போது ராகுல் காந்தி கூறியதாவது: உண்மை தான் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது. இந்தியாவும் உண்மையின் பாதையில் பயணிக்கிறது. அந்த வகையில், நான் 100 சதவீதம் உண்மையை மட்டும் கூற விரும்புகிறேன். ‘எச் பைல்ஸ்’ என்பது ஒரு மாநிலமே எப்படி திருடப்பட்டது என்பது பற்றியது. வாக்கு திருட்டு என்பது ஒரு தொகுதியில் மட்டும் நடக்கும் மோசடி அல்ல. அது, ஒட்டுமொத்த மாநிலத்திலும், தேசம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டு நடந்த அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெறும் என தேர்தலுக்கு முன்பாக வெளியான அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் கூறப்பட்டது.
90 சட்டப்பேரவை தொகுதிகளில் காங்கிரஸ் 60 முதல் 65 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்றும் பாஜ 20 முதல் 25 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் முடிவு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. இதில் ஏதோ தவறு நடந்துள்ளது என எங்கள் கட்சியினரும், வேட்பாளர்களும் முறையிட்டனர். ஏற்கனவே, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநில தேர்தல்களில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக எங்களுக்கு அனுபவம் இருக்கும் நிலையில், அரியானா தேர்தல் தோல்வி குறித்து விரிவான ஆய்வு நடத்தினோம்.
அதில் கிடைத்த தகவல்களை நிச்சயம் என்னால் நம்ப முடியவில்லை. இதனால் ஆய்வு நடத்தியவர்களை ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்க்க சொன்னேன். அதன்படி, 100 சதவீதம் உண்மையான புள்ளிவிவரங்களை இங்கு உங்கள் முன் வைக்கிறேன். அரியானாவில் நடந்திருப்பது ஆபரேஷன் ஆட்சி திருட்டு. காங்கிரசின் மகத்தான வெற்றியை தோல்வியாக மாற்ற மிகப்பெரிய சதித்திட்டம் அது. வாக்கு எண்ணிக்கைக்கு 2 நாட்களுக்கு முன் அரியானா முதல்வர் நயாப் சிங் சைனி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாஜவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என சிரித்துக் கொண்டே கூறினார். அவரது முகத்தில் அப்படிப்பட்ட ஒரு சிரிப்பு இருந்தது. அதன் பின்னால் மிகப்பெரிய சதி நடந்துள்ளது.
வரலாற்றிலேயே முதல் முறையாக அரியானாவில் தபால் ஓட்டு முடிவுகளுக்கும், வாக்கு இயந்திரத்தில் பதிவான ஓட்டு முடிவுகளுக்கும் இடையே வித்தியாசம் இருந்தது. தபால் ஓட்டுகளில் 73 இடங்களை காங்கிரசும், 17 இடங்களை பாஜவும் கைபற்றின. ஆனால் வாக்கு இயந்திர ஓட்டு எண்ணிக்கைகள் வேறு மாதிரியாக இருந்தன. அரியானா தேர்தலில் பாஜ 48 இடங்களிலும், காங்கிரஸ் 37 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதில், வாக்கு வித்தியாசம் குறைவாக உள்ள 8 தொகுதிகளில் மொத்த வாக்கு எண்ணிக்கை 22,779. அதாவது, 22,779 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது.
ஆனால் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன. இப்படி, மொத்தம் 2 கோடி வாக்காளர்களில் 25 லட்சத்து 41 ஆயிரத்து 144 வாக்குகள் திருடப்பட்டுள்ளன. அதாவது, 8 வாக்காளர்களில் ஒருவர் போலி வாக்காளர். இது மொத்த வாக்குகளில் 12.5 சதவீதம். இதில், 5 லட்சத்து 21 ஆயிரத்து 619 ஓட்டுக்கள் போலியானவை. 93 ஆயிரத்து 174 ஓட்டுக்கள் போலியான முகவரியை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரே முகவரியில் பல வாக்காளர்களாக 19 லட்சம் பேர் உள்ளனர். பலர் படிவம் 6 மற்றும் 7 மூலம் போலியாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
வாக்காளர் படிவத்தில் முகம் சரியாக தெரியாத அளவுக்கு மறைக்கப்பட்ட ஒரு பெண்ணின் புகைப்படம், பல வாக்குச் சாவடிகளில் துர்கா, சங்கீதா போன்ற பெயர்களில் இடம்பெற்றுள்ளார். இதே போல ஒரே ஆணின் பிளர் செய்யப்பட்ட புகைப்படத்துடன் பல வாக்குகள் உள்ளன. அப்படி இருக்கையில், யார் வேண்டுமானாலும் நான் தான் துர்கா எனக் கூறி வாக்களித்து விட்டு செல்ல முடியும். இதுபோன்று, 1,24,177 வாக்காளர்கள் பல வாக்குச் சாவடிகளில் அரியானாவில் உள்ளனர். உத்தரப் பிரதேச பாஜ அமைச்சர் லட்சுமி நாராயணுடன் இருக்கும் பாஜ நிர்வாகி தால்சந்த் மற்றும் அவரது மகனின் பெயரும் புகைப்படமும் உத்தரப் பிரதேச வாக்காளர் பட்டியலிலும் இருக்கிறது.
அரியானா வாக்காளர் பட்டியலிலும் உள்ளது. இதுபோன்று உபி மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் அரியானா பட்டியலிலும் உள்ளனர். இப்படி, பாஜவுக்கு வாக்களிப்பதாக இருந்தால் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வாக்களிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், அரியானா தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் ஆதரவாளர்களின் 3.5 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அனைவரும் முந்தைய மக்களவை தேர்தலில் ஓட்டளித்தவர்கள். ஆனால் பாஜ தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, இத்தனை பேரையும் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறார்கள்.
ஒரே நபருக்கு 2 இடங்களில் வாக்குகள் இருப்பதை அழிக்கும் தொழில்நுட்பம் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. ஆனால் அதை பயன்படுத்தி ஏன் டூப்ளிகேட் வாக்குகளை அளிக்கவில்லை? ஏனென்றால் அவ்வாறு செய்தால் தேர்தல் நியாயமாக நடக்கும். அந்த நியாயமான தேர்தலை தேர்தல் ஆணையம் விரும்பவில்லை. அதனால் ஆளும் கட்சியின் வெற்றியை உறுதி செய்வதற்காக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரும் 2 தேர்தல் ஆணையர்களும் பாஜவுடன் கூட்டுச் சேர்ந்துள்ளனர். பிரதமர் மோடியின் கூட்டாளிகள் அவர்கள். இந்த ஆட்சித் திருட்டு இந்தியாவின் ஜனநாயகத்தை அழித்து விட்டது. அதன் சமீபத்திய ஆயுதம் தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம். இந்த வாக்கு திருட்டு தற்போது பீகாரிலும் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு ராகுல் காந்தி கூறி உள்ளார்.
* பிரேசில் மாடல் அழகி படத்துடன் 22 ஓட்டு
பிரேசில் மாடல் அழகி ஒருவரின் புகைப்படத்துடன் ராய் சட்டப்பேரவை தொகுதியில் 10 வெவ்வேறு வாக்குச்சாவடிகளில் 22 வாக்குகள் உள்ளன. ஒரே பெண்ணின் புகைப்படம், ஒரே தொகுதியில் 100 ஓட்டுகள் உள்ளன.
போலி வாக்குகள் 5,21,619
போலி முகவரி 93,174
ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்குகள் 19,26,351
மொத்தம் 25,41,144
* வீட்டு எண் ‘0’ இதுவும் பொய்
வீடற்ற மக்களுக்கு அவர்களின் வாக்காளர் பட்டியலில் வீட்டு எண் பூஜ்ஜியம் என குறிப்பிடுவதாக சமீபத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்திருந்தார். அதை குறிப்பிட்ட ராகுல் இந்த தகவலும் பொய்யானது எனக் கூறினார். அரியானாவில் பல வாக்காளர்கள் வீட்டு எண் பூஜ்ஜியம் என குறிப்பிட்டிருப்பதாகவும், ஆனால் அவர்கள் வீடற்றவர்கள் இல்லை எனக்கூறிய ராகுல் காந்தி, சம்மந்தப்பட்ட வாக்காளர்கள் வசிக்கும் வீட்டின் புகைப்படத்தையும் வெளியிட்டார். இது, போலி வாக்காளர்களின் முகவரியை கண்டறிவதை சிக்கலாக்கும் சதி என அவர் குற்றம்சாட்டினார். இதுபோல 93 ஆயிரம் போலி முகவரியில் போலி வாக்காளர்கள் இருப்பதாக ராகுல் குறிப்பிட்டார்.
* ஒரே வீட்டில் 501 வாக்காளர்கள்
பல்வால் ஜில்லா பரிஷத் துணைத் தலைவராக உள்ள பாஜ தலைவர் எண் 150 வீட்டில் வசிக்கிறார். அந்த முகவரியில் மட்டும் 66 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரியானாவின் ஹோடல் தொகுதியில் ஒரே வீட்டில் 501 வாக்குகள் உள்ளன. தேர்தல் விதிப்படி ஒரே வீட்டில் 10க்கும் மேற்பட்ட ஓட்டுகள் இருந்தால் அங்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் மேற்கூறிய இடங்களில் தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே தான் சோதனை நடத்துவதில்லை என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
* சிசிடிவி பதிவை வெளியிடாதது ஏன்?
ராகுல் காந்தி கூறுகையில், ‘‘அரியானா மாநில வாக்காளர் பட்டியலில் ஒரே பெண்ணுக்கு 2 பூத்களில் 223 ஓட்டு உள்ளது. அந்த பெண் நினைத்தால் எத்தனை முறை வேண்டுமானாலும் வாக்களிக்க முடியும். இதனால்தான் வாக்குச்சாவடிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை தேர்தல் ஆணையம் வெளியிடாமல் இருக்கிறது. ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகளில் லட்சக்கணக்கான போலி ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன’’ என்றார்.
* ஜென் இசட் இளைஞர்களுக்கு கோரிக்கை
ராகுல் காந்தி பேசுகையில், ‘‘இந்திய ஜென் இசட் இளைஞர்கள் வாக்குத் திருட்டை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் இது உங்கள் எதிர்காலத்தைப் பற்றியது. உங்கள் எதிர்காலம் அழிக்கப்படுகிறது. எனவே நீங்கள் கேட்பதும் கவனிப்பதும் முக்கியம்.’’ என்றார்.
* ஏன் முறையிடவில்லை? தேர்தல் ஆணையம் கேள்வி
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த தேர்தல் ஆணைய அதிகாரி, ‘‘வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது ஒரே நபரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை வந்தால் அதை கவனித்து திருத்த வேண்டியது கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களின் கடமை. அப்படி அரியானா வாக்காளர் பட்டியல் குறித்து எந்தவொரு அரசியல் கட்சிகளும் மேல்முறையீடு செய்யவில்லை. காங்கிரஸ் வாக்குச்சாவடி ஏஜென்ட்களிடம் இருந்தும் எந்தவொரு கோரிக்கை அல்லது ஆட்சேபணையையும் வரவில்லை. வாக்காளர் பட்டியலில் இதுபோன்ற பிழைகளை திருத்தி சரி செய்வதற்காகத்தான் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. இதை ராகுல் காந்தி ஆதரிக்கிறாரா அல்லது எதிர்க்கிறாரா?’’ என கேள்வி எழுப்பி உள்ளனர்.
* ஆதாரமற்றது: பாஜ மறுப்பு
ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு அளித்த பேட்டியில், ‘‘ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் தவறானது, ஆதாரமற்றது. அரியானா தேர்தலில் காங்கிரசின் தோல்விக்கு உட்கட்சி மோதலே காரணம். அதை அவர்கள் கட்சியினரே ஒப்புக் கொள்கின்றனர். பீகாரில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் ராகுல் இப்படி பேசுவது, பீகாரில் காங்கிரசுக்கு எதுவும் மிச்சமில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. அதனால்தான் அவர் மக்களின் கவனத்தை திசை திருப்ப பார்க்கிறார். வாக்களிப்பதிலோ, வாக்காளர் பட்டியலிலோ தவறு இருந்தால் தேர்தல் ஆணையத்திடம் முறையிடலாம், நீதிமன்றத்தை நாடலாம். அதை செய்யாமல் தேசத்திற்கு எதிரான சக்திகளுடன் இணைந்து நாட்டையும் அதன் ஜனநாயக அமைப்பையும் ராகுல் அவமதிக்கிறார், ஜென் இசட் இளைஞர்களை தூண்டிவிடப் பார்க்கிறார்’’ என்றார்.