ஹரியானாவில் நடந்த வாக்குத் திருட்டு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: ராகுல் காந்தி வெளியிட்ட ஹரியானாவில் நடந்த வாக்குத் திருட்டு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வாக்கு திருட்டு குறித்து இன்று ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். மத்தியில் ஆளும் பாஜக, தேர்தல் ஆணையத்தை தனது கைப்பாவையாக வைத்துக்கொண்டு வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். அந்த வகையில், இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, பாஜக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த நிலையில், ஹரியானாவில் நடந்த வாக்குத் திருட்டு அதிர்ச்சி அளிக்கிறது என முதல்வர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில்,
ஹரியானா வாக்குத் திருட்டு அதிர்ச்சி தருகிறது
பாஜகவின் தேர்தல் வெற்றிகளின் நம்பகத்தன்மை குறித்து பெரும் சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஹரியானாவில் வாக்குத் திருட்டு நடந்திருப்பதை வலுவான ஆதாரங்களுடன் என் சகோதரர் நிரூபித்துள்ளார்.
வாக்குதிருட்டு: ஆணையம் விளக்கம் தரவில்லை
மக்களின் வரிப்பணத்தில் செயல்படும் தேர்தல் ஆணையம், புகார் குறித்தும் இதுவரை விளக்கம் தரவில்லை.பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசியும் வெறுப்புப் பிரச்சாரத்தின் மூலமும் 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்தது. வாக்குத்திருட்டு குறித்து ஆதாரங்கள் வெளியிட்டபின்பும் தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் தரவில்லை.
பாஜக மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்: முதல்வர்
பாஜகவின் பிரித்தாளும் அரசியல் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். தற்போது தேர்தல் மோசடிகளையும் தாண்டி வாக்காளர் பட்டியலிலேயே மோசடி செய்ய பாஜக தொடங்கிவிட்டது .
எஸ்.ஐ.ஆர். மூலம் மக்களின் வாக்குரிமை பறிப்பு
எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் நாட்டு மக்களின் வாக்குரிமையை திட்டமிட்ட முறையில் பறிக்கத் தொடங்கி இருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது. மக்களின் வாக்குரிமையை பறித்ததற்கு நேரடி ஆதாரமாக திகழ்கின்றன பீகார், ஹரியானா. வாக்காளர் பட்டியலில் மோசடி செய்து மக்கள் தீர்ப்பையே பாஜக திருடுவது அம்பலமாகி உள்ளது. வலுவான ஆதாரங்களுடன் தன் மீது கூறப்பட்ட புகார் பற்றி தேர்தல் ஆணையம் பதிலளிக்குமா?.
ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்குமா?
தேர்தல் ஆணையம் மக்களுக்கு பதிலளித்து ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்குமா? . இந்திய ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்படவில்லை என்ற மக்களின் நம்பிக்கையை ஆணையம் மீட்டெடுக்குமா? என கேள்வி எழுப்பினார்.