தூக்கிலிடும் மரண தண்டனை மிகப்பழமையான நடைமுறை: உச்ச நீதிமன்றம் கருத்து
புதுடெல்லி: தூக்கு தண்டனை என்பது வலி நிறைந்த ஒன்றாக இருப்பதாகவும் இதற்கு மாற்றாக விஷ ஊசி செலுத்தி மரண தண்டனையை நிறைவேற்றும் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என்றும் அமெரிக்காவில் 50 மாகாணங்களில் 49 மாகாணங்கள் இந்த விஷ ஊசி செலுத்தும் நடைமுறையை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் இந்தியாவிலும் அதை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ரிஷி மல்கோத்ரா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த பொதுநல மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்திப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் இந்த விவகாரம் தொடர்பாக முடிவெடுப்பது என்பது அரசின் கொள்கை முடிவு சார்ந்தது.
மேலும் இது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ள நிபுணர் குழுவை அமைக்க திட்டமிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அப்போது பேசிய நீதிபதிகள் மரண தண்டனை அனுபவிக்க போகும் ஒரு குற்றவாளி தான் எந்த முறையில் கொல்லப்பட வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்க உரிமை கொடுக்கப்பட வேண்டும் என மனுதாரர் கேட்கிறார்கள். ஆனால் இந்த விவகாரத்தில் பழைய நடைமுறையில் இருந்து மாறுவதற்கு மத்திய அரசு தயாராக இல்லை என்பது போல் தெரிகிறது. ஒருவரை தூக்கில் இட்டுக் கொல்வது என்பது மிகவும் பழைய நடைமுறை என கருத்து கூறினார்கள். பிறகு வழக்கின் விசாரணையை நீதிபதிகள் நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.