2023 அக். 7ல் 1,200 பேரை ஹமாஸ் கொன்றதால் காசாவில் நடந்த போரில் 70,000 பாலஸ்தீன மக்கள் பலி; அமைதி பேச்சுவார்த்தையில் மீண்டும் இழுபறி: இன்றுடன் 2 ஆண்டு நிறைவு
கெய்ரோ: இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கி 2 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க அதிபர் டிரம்ப் சமாதானத் திட்டத்தின் அடிப்படையில் எகிப்தில் நடக்கும் பேச்சுவார்த்தை இழுபறியாகவே இருந்து வருகிறது.
கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி, ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் நடத்திய திடீர் தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் தொடங்கியது. போர் தொடங்கி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் தரப்பில் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு சுமார் 1,983 ஆக உயர்ந்துள்ளது. இதில், தொடக்கத் தாக்குதலில் உயிரிழந்த 1,195 பேர், காசாவில் நடந்த தரைவழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட 700க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் தொடர்ச்சியான ராக்கெட் தாக்குதல்களில் பலியான பொதுமக்கள் அடங்குவர். மேலும், பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
மறுபுறம், இஸ்ரேலின் தொடர்ச்சியான வான்வழி மற்றும் தரை வழித் தாக்குதல்களால் காசாவில், பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 67,000-ஐத் தாண்டியுள்ளது. இடிபாடுகளில் சிக்கி மீட்கப்படாத உடல்களையும் கணக்கில் கொண்டால், இந்த எண்ணிக்கை 70,000-ஐத் தாண்டியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தையும் கடந்துள்ளது. போரினால் காசா பகுதி முற்றிலுமாகச் சிதைந்து, பஞ்சம் மற்றும் நோய் போன்ற கடுமையான மனிதாபிமான நெருக்கடியையும் சந்தித்து வருகிறது.
காசாவில் நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர எகிப்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. கடந்த காலங்களில் பலகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த செப்டம்பர் மாதம் 20 அம்ச சமாதானத் திட்டம் ஒன்றை முன்மொழிந்தார். இந்தப் புதிய திட்டத்தின் அடிப்படையில் தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. டிரம்பின் திட்டத்தின்படி, போர் நிறுத்தம் ஏற்பட்ட 72 மணி நேரத்திற்குள் ஹமாஸ் பிடியில் உள்ள அனைத்து இஸ்ரேலியப் பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். மேலும், ஹமாஸ் அமைப்பு தன்னிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் ஒப்படைத்துவிட்டு, காசாவின் எதிர்கால ஆட்சியில் எந்தப் பங்கையும் வகிக்கக் கூடாது.
இஸ்ரேல் படைகள் படிப்படியாக காசாவிலிருந்து வெளியேறும். இருப்பினும், இந்தத் திட்டத்தில் உள்ள பல அம்சங்களில் இரு தரப்புக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ஆயுதங்களை முழுமையாகக் கைவிட ஹமாஸ் மறுத்து வருகிறது. அதேசமயம், காசாவின் நிர்வாகத்தை பாலஸ்தீன ஆணையத்திடம் ஒப்படைப்பதில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இந்த முட்டுக்கட்டைகளுக்கு மத்தியிலும் எகிப்து, கத்தார் மற்றும் அமெரிக்க அதிகாரிகளின் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த வாரம் முதல் கட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.