ஹாஃப் மாரத்தான் ஓட்டம்; கென்யாவின் அலெக்ஸ், லிலியன் முதலிடம் பிடித்து சாதனை
புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடந்த வேதாந்தா ஹாஃப் மாரத்தான் போட்டியில் கென்யா வீரர் அலெக்ஸ் மதாடா, அந்நாட்டு வீராங்கனை லிலியன் கசாய்ட் ரெங்கெருக் முதலிடம் பிடித்து அசத்தினர். டெல்லியில் வேதாந்தா ஹாஃப் மாரத்தான் போட்டிகள் நேற்று நடந்தன. 21.1 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகளும் பங்கேற்றனர். ஆடவர் பிரிவில் கென்யா வீரர் அலெக்ஸ் மதாடா, மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்து போட்டி தூரத்தை, 59:50 நிமிடங்களில் கடந்து முதலிடம் பிடித்தார். மகளிர் பிரிவில் நடந்த போட்டியில் கென்ய வீராங்கனை லிலியன் கசாய்ட் ரெங்கெருக், 21.1 கிலோ மீட்டர் தூரத்தை 1 மணி நேரம், 7:20 நிமிடங்களில் கடந்து முதலிடம் பிடித்து அசத்தினார். இருவருக்கும் தலா ரூ. 24 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.
வேதாந்தா ஹாஃப் மாரத்தான் ஓட்டப் போட்டியில் ஆடவர், மகளிர் பிரிவு போட்டிகள் இரண்டிலும் கென்யாவை சேர்ந்தவர்கள் வெற்றி பெறுவது தற்போது 2வது முறை. இதற்கு முன், 2006ல், கென்யா வீரர் பிரான்சிஸ் கிபிவாட், வீராங்கனை லினெத் செப்குருய் முதலிடம் பிடித்து சாதனை படைத்திருந்தனர். நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற கென்ய வீரர், வீராங்கனையை, 9 முறை ஒலிம்பிக் ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற ஜாம்பவான் வீரர் மற்றும் போட்டி தூதர் கார்ல் லூயிஸ், வெற்றிக் கோடருகே நின்று வரவேற்றார். இந்த போட்டிகளில், 40,000 பேர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.