பல மதத்தினர் பயணம் செய்யும் ரயில்களில் ஹலால் இறைச்சி உணவு மட்டும் வழங்குவதா?.. மனித உரிமைகள் ஆணையம் அதிரடி உத்தரவு
புதுடெல்லி: மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த சுனில் அஹிர்வார், சமீபத்தில் பரபரப்பான புகார் ஒன்றை முன்வைத்தார். அதில், ரயில்களில் இந்து, சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என்ற பல மதத்தை சேர்ந்த மக்கள் பயணம் செய்கின்றனர். ஆனால் ரயில் உணவுகளில் அசைவ உணவு தயாரிப்புக்கு ஹலால் இறைச்சியை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இது பிற மதத்தினரின் உணவு சுதந்திரத்துக்கு எதிராக உள்ளது’ என குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக சுனில் அஹிர்வார் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திலும் புகார் அளித்தார். அதில், ரயில்களில் ஹலால் இறைச்சி உணவுகள் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்து, சீக்கிய மதத்தை சேர்ந்த பயணிகள், தங்களின் மத நம்பிக்கை அடிப்படையிலான உணவை பெற முடியவில்லை.
இது பிற சமூகத்தினர் மீதான பாரட்சமான நடவடிக்கை. அதோடு அரசமைப்பு வழங்கி உள்ள சமத்துவம், கண்ணியமான வாழ்க்கை, மத சுதந்திரம் வாழ்வாதாரம் உள்ளிட்ட உரிமைகளை மீறும் வகையில் உள்ளது. அரசமைப்பு சட்டம் வலியுறுத்தும் மதசார்பின்மைக்கு எதிராக உள்ளது. இது இந்து மதத்தை சேர்ந்த தலித் சமூகத்தின் மற்றும் இஸ்லாமியர்கள் அல்லாத பிற சமூகத்தினரின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது’ என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் பிரியங்க் கனுங்கோ தலைமையிலான அமர்வு விசாரித்து, ‘அரசு முகமை என்ற அடிப்படையில் அனைத்து மதத்தினரின் உணவு பழக்க வழக்கத்தை ரயில்வே மதித்து செயல்பட வேண்டும்’ என்று கருத்து தெரிவித்தது. அதோடு, ரயில்வே வாரிய தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த விவகாரத்தில் 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.