உதுமானிய பேரரசிடம் இருந்து இஸ்ரேல் நகரை மீட்ட இந்திய வீரர்கள்: ஹைபா நகர மேயர் புகழாரம்
ஹைபா: இஸ்ரேலின் துறைமுக நகரான ஹைபா பண்டைய காலத்தில் உதுமானிய பேரரசின் கீழ் இருந்து வந்தது. முதலாம் உலக போரின் போது உதுமானிய பேரரசுக்கும், பிரிட்டிஷ் படைகளுக்கும் கடும் சண்டை நடந்து வந்தது. இதில் ஹைபாவில் நடந்த சண்டையில் இந்திய படைகள் கடும் போர் புரிந்தன. கடைசியாக 1918 செப்டம்பர் 23ம் தேதி ஹைபா பிரிட்டிஷின் கட்டுபாட்டின் கீழ் வந்தது. இந்த போரில் ஆயிரக்கணக்கான இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். உதுமானிய பேரரசிடமிருந்து மீட்கப்பட்டதன் நினைவு நாளை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23ம் தேதி ஹைபா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் ,ஹைபா போரில் உயிரிழந்தவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சியில் ஹைபா நகர மேயர் யோனா யாஹவ் பேசுகையில்,‘‘ பிரிட்டிஷார் மூலம் ஹைபா நகர் மீட்கப்பட்டது என்று பழைய காலத்தில் இருந்தே சொல்லப்பட்டு வருகிறது. ஹைபாவை இந்திய வீரர்கள் தான் மீட்டனர் என்பது ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்தது. இதனால், பள்ளி மாணவர்களின் வரலாற்று பாடங்களில் ஹைபாவை மீட்க உதவியது இந்திய வீரர்கள் என மாற்றி வருகிறோம்’’ என்றார்.