ஹெச்-1பி விசா கட்டண விவகாரம்; ‘உலகளாவிய பணியாளர்களே யதார்த்தம்!’: அமெரிக்காவுக்கு ஒன்றிய அமைச்சர் பதிலடி
புதுடெல்லி: அமெரிக்காவின் ஹெச்-1பி விசா கட்டண உயர்வுக்கு, ‘உலகளாவிய பணியாளர் முறை ஒரு தவிர்க்க முடியாத யதார்த்தம்’ என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கடந்த 19ம் தேதி புதிய ஹெச்-1பி விசாக்களுக்கு ஒருமுறை கட்டணமாக 1,00,000 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.83 லட்சம்) செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த புதிய விதிமுறை 21ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
ஏற்கனவே விசா வைத்திருப்பவர்களையோ, புதுப்பிப்பவர்களையோ இது பாதிக்காது என வெள்ளை மாளிகை தெளிவுபடுத்தியுள்ளது. ஹெச்-1பி விசா பெறுபவர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியர்கள் என்பதால், இந்த கட்டண உயர்வு இந்திய மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களிடையே பெரும் நிதி நெருக்கடியையும், நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்கியுள்ளது. இந்த பரபரப்பான சூழலில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நியூயார்க்கில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த நிகழ்ச்சியில் இதற்கு பதிலளித்துள்ளார்.
அப்போது அவர் பேசியபோது, ‘இன்றைய உலகின் தேவைகளையும், மக்கள்தொகை கணக்கீடுகளையும் பார்த்தால், பல நாடுகளால் தங்களின் உள்நாட்டு மக்களைக் கொண்டு மட்டுமே தொழிலாளர் தேவையை பூர்த்தி செய்ய முடியாது. எனவே, உலகம் முழுவதும் பரவியிருக்கும் திறமையான, ஏற்றுக்கொள்ளக்கூடிய உலகளாவிய பணியாளர் முறை என்பது தவிர்க்க முடியாத யதார்த்தமாகும்’ என்று குறிப்பிட்டார். அமெரிக்காவின் பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், அவரது இந்தக் கருத்து விசா கட்டண உயர்வுக்கு எதிரான இந்தியாவின் மறைமுக ஆனால் வலுவான பதிலாகவே பார்க்கப்படுகிறது.