எச்1பி விசா புதிய கட்டணம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அமல்: அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் லுட்சின் தகவல்
நியூயார்க்: 2026ம் ஆண்டு பிப்ரவரியில் எச்1பி விசா புதிய கட்டணங்கள் நடைமுறை அமலுக்கு வரும் என்று அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் ஹோவர்டு லுட்சின் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எச்1பி விசாக்களுக்கு ஒருலட்சம் அமெரிக்க டாலர் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று அறிவித்தார். இது மிகுந்த அதிர்ச்சியை அளித்தது.
இந்நிலையில் பீதி மற்றும் குழப்பத்திற்கு இடையே எச்1பி விசாக்களுக்கான புதிய கட்டண சேவையானது தற்போதைய விசா வைத்திருப்பவர்களுக்கு பொருந்தாது என்றும் புதிய எச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் டிரம்ப் நிர்வாகம் தெளிவுபடுத்தியது.
இந்நிலையில், அமெரிக்க வர்த்தக துறை அமைச்சர் ஹோவர்டு லுட்சின் பேட்டி ஒன்றில்,‘‘புதுப்பித்தல் மற்றும் முதல் முறை விண்ணப்பதாரர்கள் உட்பட அனைத்து எச்1பி விசாக்களுக்கும் ஒரு லட்சம் அமெரிக்க டாலர் ஆண்டு கட்டணமாக இருக்கும். 2026ம் ஆண்டு பிப்ரவரியில் எச்1பி விசா புதிய கட்டணங்கள் நடைமுறை அமலுக்கு வரும். அதற்கு முன்னதாக 2026ம் ஆண்டு வரை எச்1பி விசா செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மாற்றங்கள் இருக்கும் என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.