எச்-1பி விசா நடைமுறைக்கு ஆதரவு; இந்தியர்களின் திறமையால் அமெரிக்காவுக்கு லாபம்: எலான் மஸ்க் ருசிகரமான கருத்து
வாஷிங்டன்: இந்தியர்களின் அபரிமித திறமையால் அமெரிக்கா பெரும் பயனடைந்து வருவதாக எலான் மஸ்க் பாராட்டு தெரிவித்துள்ளார். உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், இந்தியர்களின் திறமையை அவ்வப்போது பாராட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டிலும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியர்கள் உயர் பதவிகளில் கோலோச்சுவதை அவர் பெருமையுடன் சுட்டிக்காட்டியிருந்தார். இந்நிலையில், ஜெரோதா நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் காமத் உடனான பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எலான் மஸ்க், அமெரிக்காவின் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு குறித்தும், விசா நடைமுறைகள் குறித்தும் விரிவாகப் பேசியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘அமெரிக்காவின் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு இந்தியப் பொறியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில்முனைவோர் மிக முக்கிய பங்காற்றி வருகின்றனர். வெளிநாட்டினர் உள்ளூர் வேலைவாய்ப்பைப் பறிப்பதாகக் கூறுவது தவறு. கடினமான பணிகளைச் செய்யப் போதுமான திறமையாளர்கள் அமெரிக்காவில் இல்லை’ என்றார். மேலும், எச்-1பி விசா நடைமுறை குறித்துப் பேசிய அவர், ‘திறமையான வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு அமர்த்தும் இந்த விசா முறையை ஆதரிக்கிறேன். ஒருசில நிறுவனங்கள் இதைத் தவறாகப் பயன்படுத்தினாலும், இந்த முறையை ரத்து செய்தால் அது அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பாதிக்கும்’ என்று தெரிவித்தார். சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர், திறமையானவர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்.
மகனுக்கு நோபல் பரிசு பெற்ற தமிழரின் பெயர்
பெங்களூருவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிகில் காமத் நடத்திய பிரத்யேக நேர்காணல் நிகழ்ச்சியில் எலான் மஸ்க் கலந்து கொண்டு பேசினார். அப்போது தனது குடும்பம் மற்றும் குழந்தைகள் குறித்துப் பேசிய அவர், நியூராலிங்க் நிறுவனத்தின் உயர் அதிகாரியும் தனது வாழ்க்கைத் துணையுமான ஷிவோன் ஜிலிஸ் குறித்த ருசிகர தகவலை வெளியிட்டார். அதில், ‘ஷிவோன் ஜிலிஸ் ஒரு பாதி இந்தியர்; சிறுவயதில் தத்தெடுக்கப்பட்டு கனடாவில் வளர்ந்த அவரது தந்தை, ஒரு இந்திய மாணவராக இருந்திருக்கலாம். எனது மகன்களில் ஒருவருக்கு இந்தியப் பெயரைச் சூட்டியுள்ளேன்.
விண்வெளி ஆய்வில் மிகமுக்கிய பங்காற்றியவரும், 1983ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவருமான இந்திய-அமெரிக்க விஞ்ஞானி (தமிழர்) சுப்பிரமணியன் சந்திரசேகரை கவுரவிக்கும் விதமாக, எனது மகனுக்கு ‘சேகர்’ என்று பெயரை சுருக்கி வைத்துள்ளேன்’ என்றார்.