எச்.வி.ஹண்டே எழுதும் கடிதங்கள் எப்போதும் எனக்கு ஊக்கமளிப்பவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி!!
சென்னை: முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டேவின் இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவரை சந்தித்து நலம் விசாரித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே. மருத்துவரான இவருக்கு தற்போது 98 வயதாகிறது. இவரது மருத்துவமனை கீழ்ப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளது. அவரது இல்லம் கீழ்ப்பாக்கம் அடுத்த ஷெனாய் நகரில் உள்ளது. கடந்த ஆகஸ்டு 1ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினத்தன்று, இந்தியாவில் போலியோ ஒழிப்புக்காக அவர் ஆற்றிய பணிக்காக ஹாண்டே மருத்துவமனையின் டாக்டர் எச்.வி. ஹாண்டேவுக்கு, தற்போதைய தமிழ்நாடு சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணயத்தால் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஹண்டேவை அவரது இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். மக்களைத் தேடி மருத்துவம், நலம் காக்கும் ஸ்டாலின் உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் திட்டங்களை பாராட்டி முதலமைச்சருக்கு அவ்வப்போது எச்.வி.ஹண்டே கடிதங்கள் எழுதி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எச்.வி.ஹண்டே உடன் சந்திப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில்; நம் திராவிட மாடல் அரசின் திட்டங்கள் குறித்த தமது பார்வைகளை முன்வைத்தும் - தனிப்பட்ட முறையில் என்மீது அன்பு பொழிந்தும் முன்னாள் அமைச்சர் திரு. H.V.ஹண்டே அவர்கள் எழுதும் கடிதங்கள் எப்போதும் எனக்கு ஊக்கமளிப்பவை!. 99 வயதிலும் அயராமல் உழைத்து வரும் அவரை, அவரது மருத்துவமனையில் சந்தித்து மகிழ்ந்தேன்!. இவ்வாறு தெரிவித்துள்ளார்.