எச்-1பி விசா குறித்து டிரம்ப் நிர்வாகம் விளக்கம்; புதிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே ரூ.88 லட்சம் கட்டணம்: தற்போது விசா வைத்திருப்போருக்கு கிடையாது, அமெரிக்காவிலிருந்து வந்து, செல்ல தடையில்லை
வாஷிங்டன்: புதிதாக எச்-1பி விசா விண்ணப்பிப்போருக்கு மட்டுமே ஒருமுறை கட்டணமாக ரூ.88 லட்சம் வசூலிக்கப்படும் என்றும் ஏற்கனவே விசா வைத்திருப்பவர்களுக்கு இது பொருந்தாது என்றும் அமெரிக்க அரசு விளக்கம் அளித்துள்ளது. இது இந்திய ஐடி ஊழியர்கள் உள்ளிட்ட அமெரிக்காவில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது. அமெரிக்காவில் தற்காலிகமாக தங்கி வேலை செய்வதற்காக அந்நாட்டு அரசு எச்-1பி விசா வழங்குகிறது.
அதிக திறமைசாலி வெளிநாட்டவர்களை அமெரிக்காவில் பணியமர்த்த கொண்டு வரப்பட்ட இந்த விசா திட்டத்தில் முறைகேடு நடப்பதாகவும், எச்-1பி விசா மூலம் ஆரம்ப நிலை வெளிநாட்டு பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி, அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பெரு நிறுவனங்கள் பறிப்பதாகவும் அதிபர் டிரம்ப் நிர்வாகம் குற்றம்சாட்டியது. இதனால், எச்-1பி விசாவுக்கான கட்டணத்தை ரூ.1.75 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக அதிகரிக்கும் உத்தரவில் அதிபர் டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டார்.
இது அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எச்-1பி விசாவை பெறுபவர்களில் 71% பேர் இந்தியர்கள். விசா கட்டண உயர்வு செப்டம்பர் 21ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டதால், விடுமுறைக்கு சொந்த ஊர் திரும்பிய பலரும் அவசர அவசரமாக அமெரிக்க திரும்ப நிர்பந்திக்கப்பட்டனர். பல நிறுவனங்களும் உடனடியாக அமெரிக்கா திரும்ப வேண்டுமென்றும், இல்லாவிட்டால் அமெரிக்காவில் நுழைவதற்கான அனுமதி மறுக்கப்படலாம் என்றும் எச்சரித்தன.
இது தவிர, ரூ.88 லட்சம் ஆண்டு கட்டணம் என அறிவிக்கப்பட்டதால், ஒவ்வொரு ஆண்டும் இவ்வளவு தொகையை செலுத்த வேண்டுமா என ஐடி ஊழியர்கள் கதி கலங்கிப் போயினர். இந்நிலையில், எச்-1பி விசா கட்டண உயர்வு குறித்து வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் தெளிவுபடுத்தினார். அவர் அளித்த பேட்டியில், ‘‘எச்-1பி விசாவுக்கு 1 லட்சம் டாலர் (ரூ.88 லட்சம்) என்பது ஒருமுறை கட்டணம் மட்டுமே. இது ஆண்டு கட்டணம் அல்ல. புதிதாக எச்-1பி விசா விண்ணப்பவர்களுக்கு ஒருமுறை மட்டுமே இந்த கட்டணம் வசூலிக்கப்படும்.
மற்றபடி, தற்போது விசா வைத்திருப்பவர்களுக்கு எந்த மாற்றமும் இல்லை. விசா புதுப்பிக்கும் போது ஏற்கனவே உள்ள கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். மேலும் இந்த ஆண்டுக்கான லாட்டரி முறையில் ஏற்கனவே எச்-1பி விசா பெற்றவர்களுக்கும் 1 லட்சம் டாலர் கட்டணம் பொருந்தாது. இனி புதிய குலுக்கல் மூலம் விசா விண்ணப்பித்து பெறுபவர்களுக்கு மட்டுமே இந்த ஒருமுறை கட்டணம் பொருந்தும்.
தற்போது விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியில் சென்று திரும்ப எந்த கட்டுப்பாடும் கிடையாது.
அவர்கள் தாய்நாட்டிற்கு சென்று திரும்பலாம். இவ்வாறு லீவிட் கூறி உள்ளார். இது இந்திய ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டவர்களுக்கு 65,000 எச்-1பி விசா வழங்கப்படும். அதுதவிர, அமெரிக்காவில் முதுகலை பட்டம் பெற்ற 20,000 பேருக்கும் இந்த விசா வழங்கப்படும்.
தற்போதைய விசா கட்டணம் ரூ.1.75 லட்சத்தில் இருந்து ரூ.4.5 லட்சம் வரையிலும் உள்ளது. வரும் 2027ம் நிதியாண்டிற்கான எச்-1பி விசா விண்ணப்ப பதிவு காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது விண்ணப்பிப்பவர்களுக்கு ரூ.88 லட்சம் செலுத்த வேண்டியிருக்கும். எச்-1பி விசா 3 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கது.
* எகிறிய விமான கட்டணம்
டிரம்ப் அறிவிப்பை தொடர்ந்து, அமேசான், மைக்ரோசாப்ட் உட்பட பல நிறுவனங்கள் சொந்த ஊர் திரும்பிய தங்கள் ஊழியர்களுக்கு அவசர தகவல் அனுப்பி, ‘உடனடியாக அமெரிக்கா திரும்ப வேண்டும், இல்லாவிட்டால் ரூ.88 லட்சம் செலுத்த வேண்டியிருக்கும்’ என பீதியை கிளப்பின. இதனால், டெல்லி, பெங்களூரு, மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட பெருநகரங்களில் இரவோடு இரவாக பலரும் குடும்பத்துடன் அமெரிக்கா செல்ல குவிந்தனர். பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் விமான நிறுவனங்கள் முன்பாக ஏராளமானோர் டிக்கெட் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
கூட்டத்தை பயன்படுத்தி விமான நிறுவனங்களும் டிக்கெட் விலையை தாறுமாறாக உயர்த்தின. டெல்லி-நியூயார்க் விமான டிக்கெட் எக்னாமிக் வகுப்பிற்கு ரூ.1.05 லட்சமாக அதிகரித்தது. பெங்களூருவில் இருந்து சான்பிரான்சிஸ்கோ செல்ல ரூ.2.7 லட்சத்திற்கும் அதிகமாக டிக்கெட்கள் விற்கப்பட்டன. இவ்வளவு டிக்கெட் கட்டணத்தையும் கொடுத்து விட்டு ஐடி ஊழியர்கள் புலம்பியபடி சென்றனர். பலரும் தீபாவளி கொண்டாட வருவதற்கு கூட அச்சப்படுகின்றனர்.