எச்-1பி விசா கட்டண உயர்வால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பில்லை: நாஸ்காம் கணிப்பு
புதுடெல்லி: எச்-1பி விசா கட்டண உயர்வால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என நாஸ்காம் கூறி உள்ளது. அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான எச்-1பி விசா கட்டணம் ரூ.1.75 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டதன் தாக்கம் தொடர்பாக இந்திய மென்பொருள் நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: எச்-1பி விசா கட்டண உயர்வு, தற்போது இந்த விசா வைத்திருப்பவர்களுக்கு பொருந்தாது என்றும், புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், அதுவும் ஒருமுறை செலுத்தும் கட்டணம் என்றும் அமெரிக்கா தெளிவுபடுத்தி உள்ளது. இந்த விளக்கமானது, எச்-1பி விசா மூலம் பணியாற்றி வருபவர்கள் மத்தியில் குழப்பத்தை நிவர்த்தி செய்துள்ளது. மேலும், எச்-1பி விசா பெற்று அமெரிக்காவுக்கு வெளியே தங்கியிருப்பவர்கள் மத்தியிலும் அச்சத்தை போக்கி உள்ளது.
அமெரிக்காவில் செயல்படும் இந்தியர்களின் மற்றும் இந்தியாவை மையமாக கொண்ட நிறுவனங்கள் எச்-1பி விசாக்களை சார்ந்திருப்பதை ஏற்கனவே கணிசமாக குறைத்துள்ளன. எனவே இந்த கட்டண உயர்வால் பாதிப்பு என்பது சிறிய அளவில் மட்டுமே இருக்கும். மேலும், 2026 முதல் இந்த கட்டணம் நடைமுறைக்கு வரும் என்பதால் அமெரிக்காவின் திறன் மேம்பாட்டு திட்டங்களை விரிவுபடுத்தவும், உள்ளூர் ஊழியர்களை பணியமர்த்தும் பணிகளை மேம்படுத்தவும் நிறுவனங்களுக்கு போதிய காலஅவகாசமும் கிடைக்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்திய நிறுவனங்களுக்கு 2015ல் 14,792 எச்-1பி வழங்கப்பட்ட நிலையில் 2024ல் இந்த எண்ணிக்கை 10,162 ஆக குறைந்துள்ளது. அதிகபட்சமாக டிசிஎஸ் 5,505 எச்-1பி விசா பெற்றுள்ளது. இந்த விசா கட்டண உயர்வு, வரவிருக்கும் விண்ணப்ப சுழற்சியில் மட்டுமே நடைமுறைக்கு வருவதால் அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்கு உடனடி பாதகமான தாக்கம் எதுவும் இருக்காது என்றும் சில தொழில் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
* யாருக்கு பொருந்தும்? கேள்வி-பதில் வெளியீடு
எச்-1பி விசா கட்டண அறிவிப்பால் ஆரம்பத்தில் பல குழப்பங்கள் ஏற்பட்ட நிலையில், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை துறை நேற்று இது தொடர்பாக கேள்வி-பதில் விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் 2026ம் ஆண்டுக்கான குலுக்கல் முறை விசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள் உட்பட கடந்த 21ம் தேதிக்கு பிறகு எச்-1பி விசாவுக்காக விண்ணப்பம் செய்பவர்களுக்கு ரூ.88 லட்சம் ஒருமுறை கட்டணம் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.