உடற்பயிற்சி கூடங்களில் பெண்களுக்கு ஆண்கள் பயிற்சியளிப்பது ஏன்..? உயர் நீதிமன்றம் கண்டனம்
அலகாபாத்: உடற்பயிற்சிக் கூடங்களுக்குப் பெண்களும் ஆண்களும் சென்று பயிற்சி மேற்கொள்வது தற்போது இயல்பான ஒன்றாகிவிட்டது. இருப்பினும், பெரும்பாலான உடற்பயிற்சிக் கூடங்களில் பெண்களுக்கெனத் தனியாகப் பெண் பயிற்சியாளர்கள் இருப்பதில்லை. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, ஆண் பயிற்சியாளர்கள் பெண்களிடம் அத்துமீறுவதாகவும், பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுப்பதாகவும் புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த நிதின் சைனி என்ற உடற்பயிற்சிப் பயிற்சியாளர், தன்னிடம் பயிற்சிக்கு வந்த பெண்ணை ரகசியமாகக் வீடியோ எடுத்ததுடன், அவருக்கு ஆபாசப் படங்களையும் அனுப்பியுள்ளார். மேலும், மற்றொரு பெண்ணிடம் சாதி ரீதியாகவும் அவமதிப்பு செய்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக அவர் மீது போலீசார் வழக்குபதிந்தனர்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ், ‘போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல், ஆண் பயிற்சியாளர்களின் கீழ் பெண்கள் உடற் பயிற்சி பெறுவது கவலைக்குரிய விஷயம். மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட உடற்பயிற்சிக் கூடம் சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ளதா, குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளாரா?, அங்குப் பெண் பயிற்சியாளர்கள் உள்ளனரா? என்பது குறித்து மீரட் காவல்துறை விளக்கம் அளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டார்.