துப்பாக்கி முனையில் 2 தீவிரவாதிகள் கைது: ஆந்திராவில் பரபரப்பு
திருமலை: ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் தர்மவரத்தில் சமீபத்தில் நூர்முகமது என்ற தீவிரவாதியை போலீசார் கைது செய்தனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் தர்மவரத்தில் தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களான உ.பி.யை சேர்ந்த சாஜித் உசேன், மகாராஷ்டிராவை சேர்ந்த கவுபிக் ஷேக் ஆலம் ஆகிய 2 பேர் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் துப்பாக்கி முனையில் போலீசார் நேற்று கைது செய்தனர்.
தொடர்ந்து, சாஜித் உசேனிடமிருந்து ஒரு துப்பாக்கி, மின்னணு சாதனங்கள் மற்றும் தீவிரவாத ஆதரவு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஷேக் ஆலமிடம் இருந்து மின்னணு பொருட்களை பறிமுதல் செய்தனர். இருவருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளது. குறிப்பாக மவுலானா மசூத் அசாரின் சகோதரர், ஜெய்ஷீ முகமது தலைவருடன் நேரடி தொடர்பு இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். இவர்கள் இருவரும் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றதாகவும், நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டதும் தெரிய வந்தது.