விளையாட்டு பொருளாக மாறிய துப்பாக்கி; தன்னைத்தானே சுட்டுக்கொண்ட 5 வயது சிறுவன் பரிதாப பலி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் வீட்டில் சட்டவிரோதமாக வைத்திருந்த துப்பாக்கியால் விளையாடிய சிறுவன், தவறுதலாகத் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்த சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், கோட்புட்லி-பெஹ்ரோர் மாவட்டத்தில் உள்ள சிட்டோலி கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த தேவன்ஷு என்ற ஐந்து வயது சிறுவன், வீட்டின் அறையில் இருந்த பெட்டி ஒன்றைத் திறந்து பார்த்துள்ளான். அதில், அவனது தந்தை முகேஷ் சட்டவிரோதமாக வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி ஒன்று இருந்துள்ளது. அதனை ஒரு விளையாட்டுப் பொருளாகக் கருதி கையில் எடுத்த சிறுவன், அந்த துப்பாக்கியின் விசையை இழுத்துள்ளான்.
அப்போது, எதிர்பாராதவிதமாகத் துப்பாக்கி வெடித்து, அதிலிருந்து பாய்ந்த குண்டு சிறுவனின் தலையைத் துளைத்தது. துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக அறைக்கு ஓடிச் சென்று பார்த்தபோது, சிறுவன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவனை மீட்டு சாந்த்வாஜியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, சிறுவனின் தந்தை முகேஷ் மீது சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்தது மற்றும் அலட்சியமாகச் செயல்பட்டது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்தத் துப்பாக்கி அவருக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்தும், சம்பவத்தின் பின்னணி குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.