துப்பாக்கியுடன் 2 பேர் கைது 18 தோட்டாக்கள் பறிமுதல்
சூலூர்: பெண்ணை தாக்கி நகை பறித்த சம்பவத்தில் துப்பாக்கியுடன் 2 பேரை கைது செய்த போலீசார் 18 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.கோவை மாவட்டம் சூலூர் அருகே சுகந்தி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி மேரி ஜூலியானா (47). பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 28ம் தேதி இவரது கடைக்கு பைக்கில் வந்த 2 பேர் சிகரெட் வாங்குவது போல் நடித்து மேரி ஜூலியானா தலையில் சுத்தியலால் தாக்கி விட்டு அவரது கழுத்தில் அணிந்திருந்த சுமார் 4 பவுன் தங்க நகைகளை பறித்து சென்றனர்.
இதில் காயமடைந்த மேரி ஜூலியானா உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சூலூர் போலீசார் வழக்குப்பதிந்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில் நேற்று சூலூர் ராசிபாளையம் பகுதியில் தங்கி இருந்த
குணசேகரன் (62) மற்றும் விஜயகுமார் சாணி (22) ஆகியோரை மடக்கி பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர்.
பின்னர் இருவரையும் இன்று காலை அவர்களது வீட்டுக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அங்கு துப்பாக்கி மற்றும் பயன்படுத்தப்படாத 18 தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரையும் கைது செயது காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார், எதற்காக துப்பாக்கியுடன் கோவைக்கு வந்தனர்?, துப்பாக்கி விற்பனை செய்வதற்காக கோவைக்கு வந்தார்களா?, இதில் ஏதாவது சதி திட்டம் உள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.