கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு பவாரியா கொள்ளையர் மீதான வழக்கில் நவ.21ல் தீர்ப்பு: சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் அறிவிப்பு
சென்னை: கும்மிடிப்பூண்டி அதிமுக எம்.எல்.ஏ.வாகவும், அமைச்சராகவும் இருந்தவர் சுதர்சனம். 2005ம் ஆண்டு இவரது வீட்டு கதவை உடைத்து புகுந்த 5 பேர் கும்பல், சுதர்சனத்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, அவரது மனைவி மற்றும் மகன்களை தாக்கி 62 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது. இதையடுத்து, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, கொள்ளையர்களைச் சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டார். ஐஜி ஜாங்கிட் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. முக்கிய குற்றவாளியை பிப்ரவரி 1ம் தேதி கைது செய்தது. தொடர்ந்து துப்பு துலக்கியதில் அரியானா, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அதே ஆண்டு செப்டம்பரில் முக்கிய குற்றவாளிகள் இருவர் வடமாநிலத்தில் என் கவுன்டர் செய்யப்பட்டனர்.
இதையடுத்து, 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ், அவரது சகோதரர் ஜெகதீஷ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஜாமீன் பெற்ற மூன்று பெண்கள் தலைமறைவாகி விட்டனர். கைது செய்யப்பட்ட ஓம்பிரகாஷ் உள்பட இருவர் சிறையிலேயே இறந்துவிட்டனர். மீதமுள்ள ஜெகதீஷ், ராகேஷ், அசோக் மற்றும் ஜெயில்தார் சிங் ஆகிய நான்கு பேருக்கு எதிரான வழக்கு சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆப்ரஹாம் லிங்கன் முன்பு விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில், 86 பேர் காவல் துறை சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்த நிலையில், ஜெகதீஷ் உள்பட நான்கு பேருக்கு எதிரான இந்த வழக்கில் நவம்பர் 21ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று கூடுதல் அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.