கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: கலெக்டர், எம்எல்ஏ ஆய்வு
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் சென்னை-கொல்கத்தா செல்லும் ஜிஎன்டி நெடுஞ்சாலை மற்றும் சர்வீஸ் சாலைகளில் சோப்பு நுரை போல் ரசாயன கழிவுகளுடன் கூடிய கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடிவருகிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் பல்வேறு நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்தும் நேற்று மாவட்ட கலெக்டர் மு.பிரதாப், டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
கும்மிடிப்பூண்டி பேராட்சிக்கு உட்பட்ட காட்டுக்கொல்லை தெருவை ஒட்டி பெரிய தாமரை ஏரிக்குளம் உள்ளது. இப்பகுதியில் இருந்து வெளியேறும் மனித கழிவுகள் மற்றும் சிப்காட் தொழிற்பேட்டையில் வெளியேறும் ரசாயன கழிவுநீர், அங்குள்ள மழைநீர் கால்வாயில் கலந்து வருகிறது. தற்போது இந்த கழிவுநீர் அகற்றம் அதிகரித்ததால், மழைநீர் கால்வாயின் பல்வேறு இடங்களில் அடைப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக, கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி நெடுஞ்சாலை மற்றும் சர்வீஸ் சாலைகளை ஒட்டிய மழைநீர் கால்வாயிலிருந்து வெளியேறும் கழிவுநீர், சோப்பு நுரை போல் பொங்கியபடி ஆறாக பெருக்கெடுத்து ஓடிவருகிறது. இதனால் அப்பகுதியில் ஏற்படும் துர்நாற்றத்தினால், அவ்வழியே சென்று வரும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், வாகன ஓட்டிகளுக்கும் அவ்வழியே நடந்து செல்லும் பாதசாரிகளுக்கும் பல்வேறு நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை நிலவியது.
இதுகுறித்து தகவலறிந்ததும் நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப், டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஜிஎன்டி சாலையில் மழைநீர் கால்வாயிலிருந்து பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர் பகுதிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு நடத்தினர். பின்னர் அவற்றை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்டமாக, கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுநீர் வெளியேறும் ஜிஎன்டி சாலையோரமாக உள்ள மழைநீர் கால்வாயை பொதுப்பணி துறை அதிகாரியுடன் ஜேசிபி இயந்திரம் மூலமாக அடைக்கப்பட்டன.
இதனால் அங்கு மழைநீர் கால்வாயிலிருந்து ஜிஎன்டி சாலையின் இருபுறமும் சோப்பு நுரை போல் ரசாயன கழிவுநீர் தேங்கி நின்றது. அவற்றை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும், சிப்காட், மாசு கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணி துறை அதிகாரிகள் இணைந்து, கெமிக்கல் மற்றும் ஆயில் சோப்பு, உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் இருந்து கழிவுநீர் வெளியேறும் இடத்தை கண்டறிந்து அபராதம் விதிக்க திட்டமிட்டு உள்ளனர். இதுதவிர, மேற்கண்ட தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க, அதன் தடுப்புச் சுவர்களை கால்வாய் அருகே அமைக்க வேண்டும். ஒவ்வொரு தொழிற்சாலைகளும் தனியே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலத்தை உருவாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இப்பிரச்னை குறித்து பேருராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன், பொதுப்பணித்துறை, மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து தாமரை ஏரிக்குளம், மழைநீர் கால்வாய்களை நேரில் ஆய்வு செய்து, அதன் வழியே ரசாயன கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் அறிவுறுத்தியுள்ளார்.