மன்னார் வளைகுடாவில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வட மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
சென்னை: இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதே இடத்தில் நீடித்து வருகிறது. இன்று அது மேற்கு- வட மேற்கு திசையில் நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக வட மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நேற்று மழை பெய்துள்ளது. பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவியது.
அதன் தொடர்ச்சியாக ஒருசில இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக சென்னை, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதே இடத்தில் நீடித்து வருகிறது. இன்று அது மேற்கு- வட மேற்கு திசையில் நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் காரணமாக கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை நேற்று பெய்தது. விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.
அதனால் இந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம்,தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யும்.
இதேநிலை 21ம் தேதி வரை நீடிக்கும். குறிப்பாக 21ம் தேதி 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று வானம் பொதுவக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யும். மேலும், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடாமற்றும் குமரிக் கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும். அதனால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.