குஜராத்தில் பரபரப்பு 16 அமைச்சர்கள் திடீர் ராஜினாமா: புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு
காந்திநகர்: குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜ ஆட்சி நடந்து வருகிறது. அமைச்சரவையில் முதல்வர் படேல் உட்பட 17 அமைச்சர்கள் பொறுப்பில் இருந்தனர். அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், முதல்வர் படேலைத் தவிர மற்ற 16 அமைச்சர்களும் நேற்று கூண்டோடு ராஜினாமா செய்தனர். முதல்வர் படேல் மற்றும் பாஜ தேசிய பொதுச் செயலாளர் சுனில் பன்சால் இடையேயான சந்திப்புக்குப் பிறகு அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
மேலும், இன்று காலை 11.30 மணிக்கு புதிய அமைச்சரவை பதவியேற்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் குஜராத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில் அங்கு ஆம் ஆத்மி கட்சி வலுவடைந்து வருகிறது. இதனால் சாதி ரீதியாக அமைச்சரவையில் மாற்றம் செய்யவும் பிற கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பளிக்கவும் அமைச்சரவை முற்றிலும் மாற்றப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அமைச்சராக இருந்த பலர் புதிய அமைச்சரவையில் இடம் பெற மாட்டார்கள் என பாஜ கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.