குஜராத் கடற்கரையில் அத்துமீறல் ரீல்ஸ் எடுக்க பென்ஸ் காரை கடலில் இறக்கியவர் கைது
சூரத்: ரீல்ஸ் எடுப்பதற்காக குஜராத் கடலில் பென்ஸ் காரை இறக்கியவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடலில் சிக்கிய காரை கிரேன் மூலம் மீட்டனர். குஜராத் மாநிலம் சூரத்தில் டுமாஸ் கடற்கரை உள்ளது. பாதுகாக்கப்பட்ட பகுதியான இந்த கடற்கரை பகுதியில் வாகனம் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரீல்ஸ் எடுப்பதில் ஆர்வம் உள்ள ஒருவர் உயர்ரக மெர்சிடிஸ் பென்ஸ் காரை எடுத்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் டுமாஸ் கடல் பகுதிக்குள் நுழைந்தார்.
அங்கு கடல் நீரில் வைத்து ரீல்ஸ் எடுக்க முயன்ற போது பென்ஸ் கார் கடலில் சிக்கியது. இதையடுத்து காரை மீட்க அவர் கடும் முயற்சி மேற்கொண்டும், முடியாமல் போகவே கிரேனை வரவழைத்து கார் மீட்கப்பட்டது. இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவியது.
பென்ஸ் காரை கடலில் இருந்து கிரேன் மீட்டு வெளியே கொண்டு வந்த வீடியோ இணையத்தில் பரவுவதை அறிந்ததும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரீல்ஸ் எடுக்க காரை ஓட்டி வந்த நபரை கைது செய்தனர். மேலும் அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும், பென்ஸ் கார் தொடர்பாக இன்சூரன்ஸ் கோரிக்கை வந்தால் நிராகரிக்கவும் பரிந்துரை செய்தனர்.