குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் பூபேந்திர படேல் தவிர 16 அமைச்சர்கள் ராஜினாமா
குஜராத்: குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் பூபேந்திர படேல் தவிர 16 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 16 அமைச்சர்களும் தங்களின் ராஜினாமா கடிதத்தை முதல்வர் பூபேந்திர படேலிடம் அளித்தனர். அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட உள்ள நிலையில் பூபேந்திர படேல் இன்று இரவு ஆளுநரை சந்திக்கிறார். காந்தி நகரில் நாளை பதவியேற்க உள்ள புதிய அமைச்சரவையில் புதியவர்களுக்கு வாய்ப்பு தர பாஜக தேசிய தலைமை முடிவு செய்துள்ளது. புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி.நட்டா பங்கேற்க உள்ளனர்.
நமது நாட்டின் பிரதமரான மோடியின் சொந்த மாநிலம் குஜராத். கடந்த 2001 முதல் பிரதமராகப் பதவியேற்கும் வரை, அதாவது 2014 வரை மோடி தான் குஜராத் முதல்வராக இருந்தார். அதன் பிறகும் கூட பாஜகவை சேர்ந்தவர்களே முதல்வராக இருக்கிறார்கள். அங்கு 1998க்கு பிறகு பாஜக மட்டுமே ஆட்சியை அமைத்துள்ளது.
அந்தளவுக்கு பாஜக வலிமையான ஒரு மாநிலம் குஜராத். அந்த குஜராத் அரசியலில் தான் இப்போது மிகப் பெரிய மாற்றம் நடந்துள்ளது. அங்கு முதல்வரைத் தவிர அமைச்சரவையில் இருந்த அனைவரும் திடீரென ராஜினாமா செய்துள்ளனர். குஜராத் அமைச்சரவையில் 16 பேர் இருந்த நிலையில், அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர். முதல்வர் பூபேந்திர படேல் மட்டுமே தனது பதவியில் நீடிக்கிறார்.
அங்கு சட்டசபைத் தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் அமைச்சரவையை மொத்தமாக மாற்றி அமைக்க பூபேந்திர படேல் முடிவு செய்துள்ளார். இந்த முடிவானது, முதல்வர் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. பாஜக தேசிய தலைமையின் அறிவுறுத்தல் பெயரிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, 16 அமைச்சர்களும் முதல்வரிடம் தங்கள் ராஜினாமா கடிதங்களை அளித்தனர். அதனை ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்திடம் முதல்வர் பூபேந்திர படேல் இன்று இரவு அளிக்கிறார்.