கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி உட்பட குஜராத்தில் 26 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு: பின்னணியில் பாஜகவின் மெகா தேர்தல் வியூகம்
காந்திநகர்: முதலமைச்சர் பூபேந்திர படேலைத் தவிர, முந்தைய அமைச்சரவை மொத்தமாக ராஜினாமா செய்த நிலையில், குஜராத்தில் 26 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். குஜராத்தில் பாஜக முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான அமைச்சரவையில் இருந்த 16 அமைச்சர்களும் நேற்று (அக். 16) தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் இன்று (அக். 17) நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் உட்பட மொத்தம் 26 பேரைக் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது.
வரவிருக்கும் உள்ளாட்சி மற்றும் 2027 சட்டமன்றத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, இந்த மாபெரும் அமைச்சரவை மாற்றம் அரங்கேறியுள்ளது. இதில், சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முக்கியத் தலைவர் அர்ஜுன் மோத்வாடியாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஜாம்நகர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியுமான ரிவாபா ஜடேஜா அமைச்சராகியுள்ளார். சிறப்பாக செயல்பட்டதற்காக, உள்துறை மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சராக இருந்த ஹர்ஷ் சங்கவி, கேபினட் அமைச்சராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
முந்தைய அரசில் நிதி அமைச்சராக இருந்த கனுபாய் தேசாய் மட்டும் புதிய அமைச்சரவையிலும் தக்கவைக்கப்பட்டுள்ளார். அதேநேரம், குஜராத் அரசியலில் முக்கிய வாக்கு வங்கியாக விளங்கும் பட்டேல் சமூகத்தைச் சேர்ந்த 6 தலைவர்களுக்கும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பழங்குடியினப் பகுதிகளில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில், அந்த சமூகத்தைச் சேர்ந்த 4 தலைவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 3 பேர், சத்திரியர் சமூகத்திலிருந்து ஒருவர் மற்றும் பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பாஜக, 3 பெண்களை அமைச்சர்களாக்கி உள்ளது.