கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு: பயனாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்
சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கலந்துகொண்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் கட்டப்பட்டுள்ள தாம்பரம் - மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். விழா முடிவுற்று இல்லம் செல்லும் வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு சென்று ஆய்வு நடத்தி, ரத்த பரிசோதனை, சளி பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, சதை பரிசோதனை உள்ளிட்ட அனைத்து விதமான பரிசோதனைகளையும் ஒரே இடத்தில் மேற்கொள்ளும் உயர்தர மத்திய ஆய்வகத்தையும் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது மருத்துவமனை இயக்குநர், சிகிச்சை பெற்று வரும் 121 புற மருத்துவ பயனாளிகள், 326 உள் மருத்துவ பயனாளிகளுக்கு, மத்திய ஆய்வகத்தில் இன்றையதினம் இதுவரை 2390 பல்வேறு வகை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
இதை தொடர்ந்து, மருத்துவமனையில் கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த மருத்துவ பயனாளியிடம் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்கள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார். அப்போது, அவர் மருத்துவமனையில் சிகிச்சை நல்ல முறையில் சிகிச்சை அளிப்பதாகவும், நன்றாக கவனித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.பின்னர், பணியாளர்களின் வருகை பதிவேடு, உள் மற்றும் புற மருத்துவ பயனாளிகளின் சிகிச்சை விவர பதிவேடுகள், மருந்துகள் இருப்பு பதிவேடு போன்றவற்றை முதல்வர் ஆய்வு செய்து, அதன் விவரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
அத்துடன், மருத்துவமனையை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும் என்றும், மருத்துவமனையில் மருத்துவ பயனாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்றும், அத்தியாவசிய மருந்துகள் தேவையான அளவிற்கு இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், எம்பி டி.ஆர்.பாலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் செந்தில்குமார், மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.