கல்வி சுற்றுலாவுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்
பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை வளர்க்கவும், படைப்பாற்றல் சிந்தனையைத் தூண்டவும், அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளை உருவாக்கும் திறனை உருவாக்கவும் அறிவியல் சார்ந்த கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகிறது. அதன்படி 2025-2026ஆம் கல்வி ஆண்டில் அரசுப்பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, ‘ஸ்டீம்’ திட்டத்தின் கீழ் அறிவியல் சார்ந்த, கல்விச் சுற்றுலா நடத்த, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதில், கல்வித் திறன், வருகைப் பதிவு, முக்கியத் தேர்வு களில் பங்கேற்பு, குழு செயல்பாடுகளில் ஈடுபாடு, கலைத் திருவிழா நிகழ்வுகள், விளையாட்டு போட்டிகள், புத்தகம் படிக்கும் பழக்கம், தலைமைத்துவம் ஆகிய பிரிவுகளில் மதிப்பீடு செய்து, மாணவ - மாணவியர் தேர்வு செய்யப்பட வேண்டும். கல்வி சுற்றுலாவுக்கு, அருகில் உள்ள பிற மாவட்டங்களையும், பிற மாநிலங்களையும் தேர்வு செய்யலாம். கல்விக் சுற்றுலாவில் மாணவர்களின் ஒழுக்கத்தை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களை நீர்நிலைகளுக்கு அழைத்துச் செல்லக்கூடாது. கல்விச்
சுற்றுலாவில் மாணவியர் இருந்தால், பெண் ஆசிரியர்கள் கட்டாயம் குழுவில் இடம்பெற வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒதுக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மேற்கண்ட விதிமுறைகளைப் பின்பற்றி பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பட்டியலைத் தயாரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.