ஜிஎஸ்டி வரி குறைப்பு அறிவிப்பு எதிரொலி; அரசுப் பத்திரங்களின் வருவாய் திடீரென 6.5% உயர்வு: வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி உயரும்
புதுடெல்லி: பிரதமர் மோடியின் மறைமுக வரி சீர்திருத்த அறிவிப்பால், அரசு கடன் வாங்குவது அதிகரிக்கலாம் என்ற அச்சம் காரணமாக, அரசுப் பத்திரங்களின் வருவாய் கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதனால் வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) தற்போதுள்ள நடைமுறையில் இருக்கும் வரிவிதிப்பு அடுக்குகளைக் குறைத்து, அவற்றை சீரமைக்க உள்ளதாக அறிவித்தார். இந்த அறிவிப்பால், ஒன்றிய அரசின் வருவாய் குறையக்கூடும் என்றும், அதை ஈடுகட்ட ஒன்றிய அரசு சந்தையில் இருந்து கூடுதலாகக் கடன் வாங்க நேரிடும் என்றும் வங்கி கருவூல அதிகாரிகள் மத்தியில் கவலை எழுந்துள்ளது.
இதன் எதிரொலியாக, கடந்த திங்கட்கிழமை அன்று 10 ஆண்டு முதிர்வு கொண்ட அரசுப் பத்திரங்களின் வருவாய், ஒரே நாளில் 10 அடிப்படைப் புள்ளிகள் உயர்ந்து 6.50 சதவீதமானது. இது, கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு, 14 மாதங்களில் இல்லாத மிக அதிகமான ஒருநாள் உயர்வாகும். இதுகுறித்து பிரபல வங்கியின் கருவூலத் தலைவர் வி.ஆர்.சி. ரெட்டி கூறுகையில், ‘வரி சீர்திருத்தங்கள் இயல்பாகவே பணவீக்கத்தைக் குறைத்து, வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றாலும், முதலீட்டாளர்களின் ஆர்வம் குறைவாக உள்ளது. எனவே அதிக பத்திரங்கள் சந்தைக்கு வரும் என்பதே கவலையாக உள்ளது’ என்றார். ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் இருந்து அரசுப் பத்திரங்களின் வருவாய் 13 அடிப்படைப் புள்ளிகள் உயர்ந்துள்ளன. கடந்த வாரம், சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான ஸ்டாண்டர்டு அண்ட் புவர்ஸ், இந்தியாவின் மதிப்பீட்டை உயர்த்தியதைத் தொடர்ந்து பத்திரங்களின் வருவாய் சற்று குறைந்திருந்தது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு சீரமைப்பு, நுகர்வு நிலைக்குள் நுழையும் கோடிக்கணக்கான இந்தியர்களுக்குப் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து எம்கே குளோபல் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் மாதவி அரோரா கூறுகையில், ‘மறைமுக மற்றும் நேரடி வரிக் குறைப்பால், 2026ம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 0.2 விழுக்காடு நிதிப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. இது பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற்பனை மற்றும் ஈவுத்தொகை மூலம் ஈடுசெய்யப்படலாம். இருப்பினும், குறுகிய காலத்தில் கூடுதல் கடன் பத்திர விற்பனை, பத்திரங்களின் வருவாய் மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும்’ என்றார். பொதுவாக ‘அரசுப் பத்திரங்களின் வருவாய்’ என்பது அரசு தனது செலவுகளுக்காக வெளியிடும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் உண்மையான வருமானமாகும். இவை அரசுப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையான வட்டி விகிதத்திலிருந்து மாறுபட்டது. சந்தையில் ஒரு பத்திரத்தின் தேவை மற்றும் விநியோகத்தைப் பொறுத்து அதன் விலை மாறும்போது, இந்த வருவாயும் மாறும். பத்திரத்தின் சந்தை மதிப்பு குறையும்போது, அதன் வருவாய் உயரும்.
மாறாக, சந்தை மதிப்பு உயர்ந்தால், வருவாய் குறையும். சமீபத்திய பொருளாதார மாற்றங்கள் மற்றும் வட்டி விகித உயர்வு குறித்த அச்சம் காரணமாக, அரசுப் பத்திரங்களின் வருவாய் தொடர்ந்து மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. பத்திரங்களின் வருவாய் உயர்ந்தால், வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உயரக்கூடும். இதனால் பொதுமக்களின் மாதத் தவணைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், அரசு புதிய திட்டங்களுக்காகக் கடன் வாங்கும்போது அதிக வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். எனவே, முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் முதல் சாமானிய மக்கள் வரை அனைவரும் உற்றுநோக்கும் முக்கியக் காரணியாக அரசுப் பத்திரங்களின் வருவாய் விளங்குகிறது என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.