ஜிஎஸ்டி அலுவலகம், வானிலை ஆய்வு மையத்திற்கு வெடி குண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு போலீஸ் வலை
சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் வானிலை ஆய்வு மையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி சாலையில் ஒன்றிய அரசு அலுவலகமான ஜிஎஸ்டி அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு இன்று காலை மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில் இன்னும் சற்று நேரத்தில் ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையத்தில் வெடி குண்டு வெடிக்கும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து ஜிஎஸ்டி அதிகாரிகள் சென்னை பெருநகர பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் அளித்தனர். அதன்படி நுங்கம்பாக்கம் போலீசார் மோப்ப நாய், வெடி குண்டு நிபுணர்கள் உதவியுடன் ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. இதையடுத்து இது ெவறும் புரளி என தெரியவந்தது.
அதைதொடர்ந்து போலீசார் மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை அவரது மின்னஞ்சல் முகவரியை வைத்து சைபர் க்ரைம் உதவியுடன் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.