ஜிஎஸ்டி வரி குறைப்பு கொண்டாட்டம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘மாஜியின் மண்டப அழைப்பால் இலை தரப்பினர் அப்செட்டில் இருக்காங்களாமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘சேலத்து கனி நிறுவனரை சமாதானப்படுத்த மலராத கட்சியின் தூதராக சென்றாராம் புரம் மாவட்ட இலை மாஜியான சண்முகமானவர்.. சந்திப்பு தோல்வியில் முடிவடைய இரு கட்சிகளின் தலைமையும் அப்செட்டில் உள்ளதாம்.. ஆனால் மாஜியானவரோ எந்தவித பரபரப்புமின்றி கூலாக உள்ளாராம்..
வழக்கத்துக்கு மாறாக தனது அண்ணன் மகனின் கல்யாண அழைப்பிதழ் வைக்கும் பணிகளில் மும்முரமாக இறங்கிட்டாராம்.. தனது சொந்த மாவட்ட கட்சி நிர்வாகிகளுக்கு கூட நேரில் செல்லாமல் தனியார் மண்டபங்களுக்கு வரவழைத்து நோட்டீஸ் வழங்குவதுபோல அழைப்பிதழை கொடுத்தாராம்.. முகம் சுளித்தபடி திரும்பிய இலைதரப்பு மூத்த நிர்வாகிகள் சிலர், கட்சி தலைமையிடம் கொந்தளித்தார்களாம்..
கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாத அண்ணனுக்கு முட்டுக் கொடுக்கும் மாஜி, பிற கட்சி நிர்வாகிகளுக்கு கொடுக்கும் மரியாதையை கூட தரவில்லை என முறையிட்டார்களாம்.. இதன் தாக்கம் வரும் தேர்தலில் எதிரொலிக்கலாம் என்ற முணுமுணுப்பு இலைகட்சி வட்டாரத்தில் கேட்கிறதது..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாம்பழ கட்சிக்கு தென் மாவட்டங்களில் அவ்வளவாக செல்வாக்கு இல்லை. அதேநேரம் பூட்டுக்கு பெயர் போன மாவட்டத்தில் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு ஆட்கள் இருக்காங்க..
தற்போது கட்சி யாருக்கு சொந்தம் என்பதில் தந்தைக்கும், மகனுக்கும் யுத்தம் நடந்து வரும் நிலையில், பூட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களில் பெரும் பகுதியினர் தந்தையின் தீவிர ஆதரவாளர்களாக உள்ளனராம்.. இவர்களில் பெரும்பாலானோர் கட்சி ஒன்றிணைய வேண்டுமென கூறி வருபவர்களாம்... இதையறியாமல் கடந்த சில நாட்களுக்கு முன் மகனானவர் பூட்டு மாவட்டத்திற்கு வந்துள்ளார். அவருக்கு மற்ற இடங்களை காட்டிலும் பூட்டு மாவட்டத்தில் பெரும் வரவேற்பு கிடைச்சிருக்கு..
இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், வரவேற்றதில் பெரும்பாலானோர் தந்தையின் ஆதரவாளர்கள்தானாம்.. அவர்கள், மகனிடம் சென்று, ‘‘தந்தையும், மகனும் இப்படி அடிச்சுக்கிட்டால், நாங்க எங்கே போவோம்... திடீர்னு ஒரு நாள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை அவர் தூக்குறார். அவரை நீங்க மீண்டும் சேர்க்குறீங்க...? நாங்க என்ன பதவி? கட்சியிலே இருக்கோமா, இல்லையான்னே தெரியலை. கொஞ்சம் அப்பாவை அட்ஜஸ்ட் பண்ணிப் போங்க...’’
என கூறினாங்களாம்.. இதனை கேட்டு கடுப்பான மகன், ‘‘இந்த மாவட்டத்தில் நமக்கான ஆதரவாளர்களே இல்லையா? நான் வந்தது எதுக்கு? இவங்க என்ன பேசிக்கிட்டிருக்காங்க...’’ என தனக்கு நெருக்கமானவர்களை கடிந்துள்ளார். அப்போது சிலர் இணைப்பை வலியுறுத்தி கோஷமிட்டிருக்காங்க.. இதனால் மேலும் அப்செட்டான மகனானவர், கடுப்பில் அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டாராம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி குறைப்பு கொண்டாட்டம் நடந்தாலும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்களை சந்திப்பதை மலராத கட்சி நிர்வாகிகள் தவிர்க்கிறாங்களாமே..’’ எனக் கேட்டார் பீட்டர் மாமா. ‘‘2017ம் ஆண்டு இந்தியா முழுவதும் ஒரே வரி என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரிகள் உற்பத்தி சார்ந்த துறைகளில் மிகப்பெரும் அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.. குறிப்பாக, திருப்பூரில் சிறு குறு மற்றும் நடுத்தர அளவிலான பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் முதல் அது சார்ந்த பல்வேறு நிறுவனங்களும் பாதிப்பை சந்தித்தன..
திருப்பூரின் ஒட்டுமொத்த உற்பத்தி வர்த்தகம் பெருமளவு குறைந்து பல்வேறு நிறுவனங்களும் அடைக்கப்பட்டது.. தொழிலாளர்கள் வேலை இழப்பை சந்தித்தாங்க.. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட போது அவசர கதியில் அமல்படுத்தப்படுவதாகவும் இதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்க வேண்டும் அல்லது தொழில் துறையினருடன் கலந்து பேசி அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.. ஆனால், ஒரே நாளில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை பிரதமர் அமல்படுத்தி விட்டார்..
இதை அப்போது கொண்டாடிய மலராத கட்சியினர் தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி குறைப்பு அமல்படுத்தப்படுவதாக மீண்டும் பிரதமரால் அறிவிக்கப்பட்ட போது இப்போதும் அதை கொண்டாடுறாங்க.. இதற்கு ஒருபடி மேலாக கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மலராத கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவருமான பெண்மணி, கடந்த 22ம் தேதி ஜிஎஸ்டி குறைப்பு அமல்படுத்தப்பட்டவுடன் ஒரு இனிப்பு கடைக்கு சென்று அவர்களுடன் கலந்துரையாடியது சமூக வலைத்தளங்களில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது..
ஜிஎஸ்டி கொண்டு வந்தவர்களே அதை குறைத்து தற்போது வெளியிட்டிருப்பதை கொண்டாடுவது சமூக வலைதளங்களில் வைரலாச்சு.. அதே நேரத்தில் வடமாநில உணவுப் பொருட்களான ரொட்டி, சப்பாத்தி உள்ளிட்டவைகளுக்கு 0 சதவீத ஜிஎஸ்டி வரையும் தமிழர்களின் உணவான இட்லி, தோசை உள்ளிட்டவற்றுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி என்பது பேசு பொருளானது..
இந்த சூழ்நிலையில் பொதுமக்களை சந்தித்து ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு அவர்கள் மூலமாக பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரசார கூட்டங்களை ஏற்பாடு செய்தாங்க.. திருப்பூரில் கடந்த 2ம் தேதி மலராத கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரான பெண்மணி வணிக நிறுவனங்கள், சிறுகுறு நிறுவனங்கள் நிறைந்த பகுதியில் பொதுமக்களை சந்தித்து ஜிஎஸ்டி வரி குறைப்பின் பயன்கள் குறித்த துண்டு பிரசுரங்களை கொடுத்து பிரதமர் மற்றும் நிதி அமைச்சருக்கு நன்றி தெரிவிக்க இருப்பதாக வடக்கு மாவட்ட மலராத கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால், ஏற்கனவே ஜிஎஸ்டி வரி விதிப்பால் மிகப் பெரும் பாதிப்பை சந்தித்த திருப்பூரில் பொதுமக்களை சந்திக்கும் போது அவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவாங்க.. அது மீண்டும் கட்சிக்கே அவப்பெயரை உண்டாக்கும் என எண்ணி திட்டமிட்ட பிரசார இயக்கத்தை கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டு, அரிசி கடைவீதியில் கட்சியினரை அழைத்து வந்து நடத்திய பொதுக்கூட்டத்தில் ஒரு பகுதியாக மகளிர் அணி நிர்வாகிகளை அழைத்து அவர்களிடம் துண்டு பிரசுரங்களை கொடுத்து பிரசார இயக்கத்தை நிறைவு செய்தாங்களாம்..
ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து நாடு முழுவதும் மலராத கட்சி கொண்டாடி வரக்கூடிய நிலையில் ஜிஎஸ்டி வரியினால் பாதிக்கப்பட்டுள்ள கோவை, திருப்பூர் உள்ளிட்ட உற்பத்தி தொழில் நிறைந்த மாவட்டங்களில் மலராத கட்சியினர் கொண்டாடுவது தொழில் துறையினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்திக்கிட்டு இருக்கு..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.