இனி 2 அடுக்கு வரி மட்டுமே ஜிஎஸ்டி குறைப்பு இன்று முதல் அமல்: பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என பிரதமர் மோடி பேச்சு
புதுடெல்லி: இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி சீரமைப்பு இன்று அமலாகிறது. இதன் மூலம் சுமார் 375 பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரிக்குறைப்பால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். கடந்த 2017ல் ஜூலை 1ம் தேதி ஜிஎஸ்டி அமல்படுத்தும்போது, 5%, 12%, 18% மற்றும் 28 சதவீதம் என 4 அடுக்கு வரிப்பிரிவுகள் அமைக்கப்பட்டன. இந்த, 4 அடுக்கு விகிதங்களுக்குப் பதிலாக 5 சதவீதம் மற்றும், 18 சதவீதம் என இரண்டு அடுக்கு வரிப்பிரிவாக இதனை மாற்ற ஒன்றிய அரசு முடிவு செய்தது.
அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மக்களுக்கான தீபாவளி பரிசாக இருக்கும் என்று பிரதமர் மோடி இது குறித்து அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டார். பின்னர் 2 அடுக்கு ஜிஎஸ்டி குறித்த புதிய திட்டத்தை அமைச்சர்கள் குழுவுடன் ஒன்றிய அரசு பகிர்ந்து கொண்டது. இதைத் தொடர்ந்து, புதிய வரி அடுக்கு முறைக்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்தது. இதன்படி, அத்தியாவசிய பொருட்கள் 5 சதவீத வரி அடுக்கிலும், இதர பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகள் 18 சதவீத வரி அடுக்கிலும் சேர்க்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே 28 சதவீத வரி அடுக்கில் இருந்த ஆடம்பர பொருட்கள், புகையிலை, மதுபானங்கள், சூதாட்டம், ஆன்லைன் கேம் போன்றவற்றுக்கு 40 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதனால், ஆட்டோமொபைல், எலெக்ட்ரானிக்ஸ், மருந்துகள் உள்ளிட்ட 375க்கும் மேற்பட்ட பொருட்களின் விலை குறைகிறது. இன்று முதல் இது அமலுக்கு வருகிறது. டூத்பேஸ்ட், சோப், ஷாம்பு, பிஸ்கெட், ஜூஸ், நெய், சைக்கிள்கள், ஆடைகள், காலணிகள் போன்றவை 5 சதவீத வரியில் வருகின்றன.
இதுபோல் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீத வரி அடுக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஏர் கண்டிஷனர், பிரிட்ஜ், டிஷ் வாஷர்கள், பெரிய திரை கொண்ட டெலிவிஷன்கள் விலை குறைகின்றன. கார்கள், டூவீலர்களின் விலையை நிறுவனங்கள் குறைத்து அறிவித்துள்ளன. டிராக்டர்கள் விலையும் குறைகிறது. ஜிஎஸ்டி குறைப்பின் முழுமையான பலன்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன.
டயர்கள் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. சாக்லேட், பால் பவுடர், இதுபோல், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் பலவற்றின் விலை குறைகிறது. 90 சதவீத ஜிஎஸ்டி குறைப்பு பலன் அடித்தட்டு மக்களுக்கு கிடைக்கும் என்று ஒன்றிய அரசின் கணிப்புகள் தெரிவிக்கின்றன. சிமென்ட் மீதான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விகிதங்கள் இன்று அமலுக்கு வருவதையொட்டி, பிரதமர் மோடி நேற்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் சிறப்புரையாற்றினார்.
அதில் அவர் கூறியதாவது: நவராத்திரியின் முதல் நாளில், நாடு சுயசார்பு இந்தியாவை நோக்கி முக்கியமான மற்றும் பெரிய அடியை எடுத்து வைக்கப் போகிறது. நாளை (இன்று) சூரிய உதயத்துடன், அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வருகின்றன. ஜிஎஸ்டி சேமிப்பு விழா தொடங்குகிறது. இதில், நீங்கள் விரும்பும் பொருட்களை மிக எளிதாக வாங்க முடியும்.
சமையலறைப் பொருட்கள் முதல் மின்னணு பொருட்கள் வரையிலும் மருந்துகள் மற்றும் உபகரணங்கள் முதல் ஆட்டோமொபைல்கள் வரையிலும் சுமார் 375 பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்பட்டிருப்பதால் திங்கள்கிழமை முதல் பொருட்கள் அவை மலிவான விலையில் கிடைக்கும். இதனால், ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், புதிய நடுத்தர வர்க்கத்தினர், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், வர்த்தகர்கள் மற்றும் கடைக்காரர்கள் பயனடைவார்கள். இந்த பண்டிகைக் காலத்தில், அனைவரின் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
2017ம் ஆண்டில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட போது இந்திய வரலாற்றில் புதிய தொடக்கம் ஏற்பட்டது. ஒரே நாடு, ஒரே வரி கனவு நனவானது. ஜிஎஸ்டிக்கு முன்பு வரி விதிப்பு சிக்கலானதாக இருந்தது. தற்போது ஜிஎஸ்டி குறைப்பால் 99 சதவீத பொருட்களின் விலை குறைகின்றன. வர்த்தகத்தில் இருந்த சிக்கல்கள் நீக்கப்படுகின்றன. ஏற்கனவே ரூ.12 லட்சம் வரை வருமானத்திற்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஜிஎஸ்டி சீர்த்திருத்தங்கள் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினருக்கு இரட்டை வரவாக அமைந்துள்ளது.
ஜிஎஸ்டி வரி குறைப்பால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெருமளவில் பலனடையும். இத்தொழில் துறையினர் மக்களுக்கு தேவையான பொருட்களை தயாரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். உள்நாட்டு பொருட்கள் சிறந்த தரத்துடன் தயாரிக்கப்பட வேண்டும். அவை உலக தரத்துடன் போட்டி போடும் வகையில் இருக்க வேண்டும். உள்நாட்டு பொருட்களை விற்பனை செய்வதிலும், வாங்குவதிலும் நாட்டு மக்கள் பெருமை கொள்ள வேண்டும். சுதந்திர போராட்டம் எவ்வாறு வலுப்பெற்று, சுதேசி இயக்கமாக மாறியதோ அதே போல இந்தியாவின் செழிப்பும் சுதேசி என்ற மந்திரத்தால் வலுப்படுத்தப்படும்.
உள்நாட்டு தயாரிப்புகளை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் இந்தியா வேகமாக வளர்ச்சி அடையும். ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும். வணிகம் செய்வதை எளிதாக்கும். அதிக முதலீட்டாளர்களை ஈர்க்கும். நாம் அனைவரும் சேர்ந்து சுயசார்பு இந்தியாவை உருவாக்குவோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
* ஜிஎஸ்டியில் இனி 5%, 18% என 2 வரி அடுக்குகள் மட்டுமே இருக்கும்.
* ஆடம்பர பொருட்கள், உடல் நலத்திற்கு தீங்கான சில பொருட்களுக்கு 40% சிறப்பு வரி அறிமுகம் செய்யப்படுகிறது.
* அனைத்து தனிநபர் ஆயுள் காப்பீடு பாலிசிகளுக்கும் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது.