8 ஆண்டாக அதிக ஜிஎஸ்டி வசூல் மக்களை இப்போது ஏமாற்றுகிறார் மோடி: முதல்வர் சித்தராமையா விமர்சனம்
மைசூரு: பிரதமர் மோடி 8 ஆண்டுகளாக அதிகப்படியாக ஜிஎஸ்டியை வசூல் செய்து விட்டு தற்போது ஏழைகளுக்கு நன்மை செய்துவிட்டதாக பிரதமர் ஏமாற்றுகிறார் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கடுமையாக விமர்சித்தார்.
மைசூரு தசரா உணவு திருவிழாவை மகாராஜா கல்லூரி மைதானத்தில் தொடங்கிவைத்து அவர் பேசியதாவது,‘ பிரதமர் மோடி இந்திய மக்களிடம் இருந்து 8 ஆண்டுகளாக அதிகமாகவே ஜிஎஸ்டி வரி வசூல் செய்துவிட்டார். தற்போது ஜிஎஸ்டியை குறைத்துவிட்டோம் என்று அவர் உள்பட பாஜவினர் பெருமை பேசி கொண்டாடுகிறார்கள். 8 ஆண்டுகளாக அதிகப்படியாக வசூல் செய்ததை திருப்பி மக்களுக்கு தருவார்களா?. ஜிஎஸ்டியை அறிமுகம் செய்த போது பிரதமர் தான் வரியை உயர்த்தினார். அதை அவரே திரும்ப பெற்றுள்ளார். ஆனால் 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதம் குறைக்க போராட்டம் நடத்தியது காங்கிரஸ் கட்சி தான். தற்போது ஜிஎஸ்டியை குறைத்துவிட்டோம் என்று இந்தியர்களை பாஜ ஏமாற்றுகிறது. இதற்கெல்லாம் மக்கள் மயங்கிவிடமாட்டார்கள்’ என்றார்.