ஜிஎஸ்டி வரி குறைப்பு அமல்; முதல் நாளில் கார்கள் விற்பனை அமோகம்
புதுடெல்லி: குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விகிதங்கள் அமலான முதல் நாளில் நாடு முழுவதும் கார்கள் விற்பனை அமோகமாக நடந்ததாக கார் உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஜிஎஸ்டியை 2 அடுக்கு வரி விகிதமாக மாற்றியதால் பல பொருட்களின் வரி குறைந்துள்ளது. இந்த முக்கிய மாற்றத்துடன் கூடிய புதிய ஜிஎஸ்டி நேற்று முன்தினம் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதையொட்டி, முதல் நாளிலேயே கார்களின் விற்பனை அமோகமாக நடந்துள்ளது.
ஜிஎஸ்டி 2.0 அமல்படுத்தப்பட்ட முதல் நாளில் 80 ஆயிரம் நுகர்வோர் விசாரணைகள் பதிவாகியுள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 30 ஆயிரம் கார்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இது 35 ஆண்டுகால வரலாற்றில் ஒரே நாளில் நிகழ்ந்த அதிகபட்ச நடவடிக்கை என்று அந்நிறுவனம் கூறி உள்ளது. சிறிய ரக கார்களுக்கு பதிவு செய்வது வழக்கமான பண்டிகைக் காலங்களை விட 50 சதவீதம் அதிகரித்தது.
ஹூண்டாய் நிறுவன விற்பனையாளர்களும் ஒரே நாளில் 11 ஆயிரம் கார்களை விற்பனை செய்துள்ளனர். இது 5 ஆண்டுகளில் சிறந்த செயல்பாடாகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் 10 ஆயிரம் கார்களையும் விநியோகித்துள்ளது. மேலும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுகர்வோர் விசாரணையைப் பெற்றுள்ளது. இதே போல, ஏசி விலை குறைந்துள்ளதால் கடந்த ஆண்டின் இதே நாளுடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளதாக ப்ளூஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.