ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் வந்த மாற்றம்.. மக்களின் கைகளில் பணம் புரளும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!!
அமராவதி: ஜிஎஸ்டியில் தற்போது செய்யப்படுள்ள மாற்றங்களால் பொதுமக்களின் கைகளில் பணம் புரளும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டியில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் இருந்த 4 வரி அடுக்குகள் 2 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 12, 28 சதவீதம் என்ற அடுக்குகள் நீக்கப்பட்டுள்ளன. 5, 18 சதவீத அடுக்குகள் மட்டுமே நீடிக்கிறது. இது வரும் 22ம் தேதி அமலுக்கு வருகிறது.
இந்நிலையி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் குறித்த விளக்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது; இரண்டு அடுக்குகள் (5 சதவீதம் மற்றும் 18 சதவீதம்) மட்டுமே கொண்ட புதிய ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையால், பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும். மக்கள் கையில் பணத்தின் இருப்பு அதிகரிக்கும். ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்கு முன், ஒன்றிய அரசு 5 அம்சங்களை கவனத்தில் கொண்டிருந்தது.
அவை, ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான வரி விகிதத்தைக் குறைத்தல், நடுத்தர வர்க்கத்தினரின் நலன்களை நிறைவேற்றுதல், விவசாய சமூகத்திற்கு பயனளித்தல், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பயனளித்தல், வேலைவாய்ப்புகள் மற்றும் ஏற்றுமதி திறனை உருவாக்கும் தொழில் துறைகளுக்கு பயனளித்தல் ஆகியவை ஆகும். 2017-18ம் நிதியாண்டில் ரூ.7.19 லட்சம் கோடியாக இருந்த ஜி.எஸ்.டி. வருவாய் 2025-ம் ஆண்டில் ரூ.22.08 லட்சம் கோடியாக உயர்ந்தது. வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 65 லட்சத்தில் இருந்து 1.51 கோடியாக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.