ஆவின், கோ-ஆப் டெக்ஸ், முதல்வர் மருந்தகம் என்று பல இடங்களில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர் அடையாள அட்டைக்கென்று பிரத்யேகமாக சலுகைகள் உண்டு: துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்
சேலம்: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (16.9.2025) சேலம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு 3,500 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகள் மற்றும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கப்படுவதன் முகமாக 100 சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியையொட்டி அமைக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுவினரின் தயாரிப்பு பொருட்களின் கண்காட்சியையும் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை:
இன்றைக்கு நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில், தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளுக்கு வங்கிக்கடன் இணைப்பையும், குழு சகோதரிகளுக்கு கிட்டத்தட்ட 1 லட்சம் அடையாள அட்டைகளையும் உங்களையெல்லாம் சந்தித்து வழங்குவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன், பெருமையடைகின்றேன். இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது, இங்கே நடப்பது அரசு விழாவா? இல்லை, மகளிர் மாநாடா என்ற அளவுக்கு எழுச்சியோடு, மகிழ்ச்சியான முகத்தோடு இங்கே வந்திருக்கக்கூடிய என்னுடைய அக்காக்களும், தங்கைகளும், அம்மாக்களும், பாட்டிகளும் அவ்வளவு மகிழ்ச்சியாக வந்திருக்கின்றீர்கள்.
இன்னொரு சிறப்பு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள். அவர்கள் நம்முடைய இயக்கம் கிடையாது, நம்முடைய கூட்டணிக் கட்சிகூட கிடையாது. இப்போது கிடையாது. சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் அருள், சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் சதாசிவம் இந்த சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை நம்முடைய அரசு செய்துகொண்டிருக்கிறது. அதற்கு என்னுடைய நன்றி என்று போட்டி போட்டுக் கொண்டு ஒற்றுமையாக பாராட்டியிருக்கிறார்கள். எப்போதும் இதே ஒற்றுமையோடு சிறப்பாக மக்கள் பணியாற்றவேண்டும் என்று உங்கள் சார்பாக நான் அவர்களை கேட்டுக் கொள்கின்றேன்.
அதேபோல் அண்ணன் அருள் பேசும்போது பாராட்டிவிட்டு சில கோரிக்கைகளை வைத்தார். அண்ணன் அருள் நான்கு வீரர்களுக்கு நான் ஊக்கத்தொகை கொடுக்க சொன்னேன். கொடுத்துவிட்டார் அதற்கு நன்றி என்று சொல்லி முடித்துவிட்டார். இன்னும் பல திட்டங்களை விளையாட்டுத் துறைக்கு நம்முடைய முதலமைச்சர் சேலம் மேற்கு தொகுதிக்கு கொடுத்திருக்கிறார். ஒரு Multipurpose Sports Complex, ஒரு Sports Hostel, ஒரு Synthetic Athletic Turf உள்ளிட்ட கிட்டத்தட்ட 35 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த திட்டங்களை, வசதிகளை நம்முடைய முதலமைச்சர் கொடுத்ததை அவர் மறந்துவிட்டார். மேலும், சில கோரிக்கைகளை வைத்திருக்கிறார். நிச்சயமாக முதலமைச்சரின் கவனத்திற்கு அதை எடுத்து சென்று நிச்சயம் அதை செய்து கொடுக்கின்ற பணிகளில் நான் ஈடுபடுவேன் என்பதை நான் இந்த நேரத்தில் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
தமிழ்நாட்டினுடைய பெண்கள் முன்னேற்ற வரலாற்றில், 1989 ஆம் ஆண்டிற்கு மிக, மிக ஒரு முக்கியத்துவம் உண்டு. உங்களுக்கு தெரியும். 1989 ஆண்டுதான் தருமபுரியில் நம்முடைய கலைஞர் இந்தியாவிலேயே முதன் முதலாக மகளிர் சுய உதவிக்குழுவினை ஆரம்பித்தார். அன்றைக்கு கலைஞர் போட்ட விதை தான், இன்றைக்கு 5 இலட்சம் குழுக்களாக தமிழ்நாடு முழுவதும் பரவி இருக்கிறது. நான் சுற்றுப்பயணமாக, கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி தமிழ்நாட்டினுடைய எந்த மாவட்டத்திற்கு சென்றாலும், முதலமைச்சரின் உத்தரவின் பேரில் அந்த ஊரில் இருக்கக்கூடிய சிறப்பாக செயல்படக்கூடிய சுய உதவிக்குழுவின் மகளிர் அந்த சகோதரிகளை சந்தித்து, அவர்களோடு உரையாடி அவர்களுடைய பிரச்சனை என்ன, அவர்கள் தொழில் எப்படி இருக்கிறது, என்ன தொழில் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் கேட்டு அறிந்து கொண்டு வருவவேன்.
அப்படி சமீபத்தில் கலைஞரின் திருவாரூர் மாவட்டத்திற்கு 5 மாதங்களுக்கு முன்பு சென்றிருந்தேன். அப்போது அவர்களோடு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு உள்ள சுய உதவிக்குழுக்களில் ஒரு சகோதரி எழுந்து, எல்லோருக்கும் அடையாள அட்டை கொடுக்கின்றீர்கள். பல்வேறு திட்டங்களுக்கு அடையாள அட்டைகள் கொடுக்கின்றீர்கள். மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த எங்களுக்கு மட்டும் அடையாள அட்டை இல்லை என்று கோரிக்கை வைத்தார்கள். நான் முதலமைச்சயிடம் மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் அடையாள அட்டை எதிர்பார்க்கிறார்கள் என்று கூறினேன். முதலமைச்சர் உடனடியாக அரசு அதிகாரிகளை வரவழைத்து உடனடியாக இதை செய்ய வேண்டும் என்ற அறிவிப்பை மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி வெளியிட்டார்கள்.
இன்றைக்கு வரலாற்று சிறப்புமிக்க ஒரு நாள். எப்படி மகளிர் சுய உதவிக் குழுவை இந்தியாவிலேயே முதன்முறையாக நம்முடைய தமிழ்நாடு தான் ஆரம்பித்ததோ, அதே மாதிரி இன்றைக்கு மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளுக்கு முதன்முறையாக அடையாள அட்டைகளை நம்முடைய அரசு கொடுத்திருக்கின்றது. கலைஞர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கை, இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
இந்த அடையாள அட்டைகளை நீங்கள் பத்திரமாக பராமரிப்பீர்கள் என்று நிச்சயமாக நம்புகின்றேன். அந்த அடையாள அட்டை மூலமாக பல பயன்கள் இருக்கிறது. இனி உங்களுடைய தயாரிப்புகளை அரசு பேருந்துகளில் 100 கிலோமீட்டர் வரை கட்டணம் இல்லாமல் நீங்கள் உங்களுடைய பொருட்களை எடுத்துச் செல்லலாம். இதனால் உங்களுக்கு Luggage Charge மிச்சம் அதனால், லாபமும் அதிகமாகும்.
அதுமட்டுமில்ல, இந்த அடையாள அட்டை மூலமாக ஆவின், கோ-ஆப் டெக்ஸ், முதல்வர் மருந்தகம் என்று பல இடங்களில் இந்த அடையாள அட்டைக்கென்று பிரத்யேகமாக சலுகைகள் உண்டு. இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதையெல்லாம் நீங்கள் பயன்படுத்த வேண்டும். ஒரு திட்டத்தை எவ்வளவு பயன்படுத்துகின்றோமோ அப்போது தான் அந்த திட்டத்துடைய வெற்றி உள்ளது.
இந்த அடையாள அட்டைகள், உங்களுக்கு இன்று முதல் ஒரு புதிய அடையாளத்தைக் கொடுக்கப் போகின்றன என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை. இன்றைக்கு, சுய உதவிக் குழுக்கள், கோடிக்கணக்கான பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தைக் கொடுத்து கொண்டிருக்கிறது.
ஆண்களுக்கு நிகராக இல்லை, ஆண்களை விட அதிகமாக,
எங்களால் குடும்பத்தை பார்த்து கொள்ள முடியும், பிள்ளைகளை காப்பாத்த முடியும், பிள்ளைகளை படிக்கவைக்க முடியும் என்று நீங்கள் ஒவ்வொருத்தரும் ஆண்களுக்கு எடுத்துக்காட்டாக, வைராக்கியமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதை பார்க்கும்போது எங்களுக்கெல்லாம் பொறாமையாகவும், Inspiration-ஆகவும் இருக்கின்றீர்கள்.
அப்படி இந்த சேலம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுகின்ற சில குழுக்களைப் பத்தி மட்டும் இங்கே நான் குறிப்பிட விரும்புகின்றேன். சேலம் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த முழு மதி மகளிர் சுய உதவிக்குழுச் சகோதரிகள் இங்க வந்து இருக்கின்றீர்கள். தொடக்கத்தில், உங்களுடைய தேவைகளுக்காக குழுவுல லோன் எடுத்து முறையாக கட்டி கொண்டிருந்தீர்கள். இன்றைக்கு சொந்தமாக Processed Food Packing Company நடத்தி கலக்கிட்டு இருக்கின்றீர்கள். உங்களுடைய இந்த தொழிற்பயணம் மிகப்பெரிய வெற்றிப்பயணமாக அமைய நாம் அனைவரும் நம்முடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்.
அதே போல, இங்கு இருக்கக்கூடிய நாழிக்கல்பட்டி
கலைமகள் மகளிர் குழுவை நாம் நிச்சயமாக அனைவரும் பாராட்டி ஆக வேண்டும். ஏன் என்றால், இந்த குழு முழுக்க முழுக்க மாற்றுத்திறனாளி சகோதரிகளுக்கான குழுவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்தக்குழுவில் இருக்கக்கூடிய அத்தனை சகோதரிகளும் என்னுடைய பாராட்டுக்களை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
குறிப்பாக, சகோதரி விமலா. ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். குழு மூலமாக அவர்கள் இன்றைக்கு சொந்தமாக ஒரு ஜெராக்ஸ் கடை நடத்திட்டு கொண்டு வருகிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு சகோதரி விமலா அவர்கள் தனக்கு யாராவது வேலை கொடுக்க மாட்டார்களா, தன்னுடைய வருமானத்திற்கு யாராவது வழி செய்ய மாட்டார்களா என்று எதிர்பார்த்து கொண்டிருந்தவர். இன்றைக்கு அவர்கள் இரண்டு சகோதரிகளுக்கு வேலை போட்டு கொடுத்திருக்கிறார்கள். இதுதான் மகளிர் சுய உதவிக்குழுவினுடைய வெற்றி. அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.
இன்றைக்கு மகளிர் குழுக்கள் தான் பல ஏழை, எளிய குடும்பங்களின் வாழ்வில் ஒளியேற்றிக் கொண்டிருக்கிறது. குழுவில் இருக்கக்கூடிய மகளிர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மகளிரையும் முன்னேற்றுகின்ற அரசாக, நம்முடைய திராவிட மாடல், நம்முடைய முதலமைச்சர் தொடர்ந்து பல திட்டங்களை செய்து கொண்டு வருகிறார்கள்.
நம்முடைய முதலமைச்சர் பெரும்பாலான திட்டங்களை, மிக முக்கியமான திட்டங்கள் அனைத்தையும், மகளிரை மையப்படுத்தி செயல்படுத்தி கொண்டிருக்கிறார்கள். உதாரணத்திற்கு முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு இட்ட ஐந்து கையெழுத்தில் முதல் கையெழுத்து மகளிர் விடியல் பயணத் திட்டத்திற்கானதாகும். இன்றைக்கு அந்த மகளிர் விடியல் பயணத் திட்டம் மூலமாக நான்கரை வருடங்களில் மட்டும் 770 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு இருக்கின்றீர்கள். அதுதான் இந்த திட்டத்துடைய வெற்றி.
அதேபோல, முதலமைச்சருடைய காலை உணவுத் திட்டம். ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 22 லட்சம் குழந்தைகள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுகிறார்கள். வெறும் வயிற்றுடன் சென்ற குழந்தைகள் இன்றைக்கு பள்ளிக்கூடம் சென்றால் முதலில் தரமான உணவு. அதன் பிறகு தரமான கல்வி என்று பெற்றோர்கள் இன்றைக்கு வாழ்த்தி, என்னுடைய குழந்தைகளை பார்த்துக் கொள்ள நம்முடைய முதலமைச்சர் இருக்கின்றார்கள். திராவிட மாடல் அரசு இருக்கிறது என்று மகிழ்ச்சியோடு பிள்ளைகளை அனுப்பி விடுகிறார்கள்.
குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்றால் மட்டும் பத்தாது, கல்லூரிக்கு சென்று உயர்கல்வி படிக்க வேண்டும் என்று அரசு பள்ளியில் படிக்கக்கூடிய அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தனியார் கல்லூரியில் சென்று படித்தாலும் அவர்களுடைய வங்கி கணக்கில் மாதம் 1,000 ரூபாய் கல்வி ஊக்கத் தொகை வழங்குகின்றார் நம்முடைய முதலமைச்சர்.
முதலமைச்சருடைய காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் சமீபத்தில் அரசு உதவி பெறுகின்ற பள்ளிகளுக்கும் சேர்த்து விரிவாக்கம் செய்தார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பஞ்சாப் முதலமைச்சர் வந்தார்கள். இந்த திட்டத்தை பற்றி முழுவதுமாக கேட்டு அறிந்து, அவர் பாராட்டி பேசியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் இந்த திட்டம் மிக, மிக சிறப்பான திட்டம். இந்த திட்டத்தை விரைவில் நான் பஞ்சாப் மாநிலத்திலும் அறிமுகப்படுத்த போகிறேன் என்று பஞ்சாப் மாநில முதலமைச்சர் கூறினார்கள். அதுதான் இந்த திட்டத்துடைய வெற்றி.
அந்த நிகழ்ச்சியில் நான் வரவேற்புரையில் பேசும் போது பெருமையாக கூறினேன், “காலை உணவுத்திட்டத்தில், தாய் உள்ளத்தோடு உணவு சமைக்கும் பணியினை மேற்கொள்வது, நம்முடைய மகளிர் சுய உதவிக் குழுக்களுடைய சகோதரிகள் என்று பெருமையாக குறிப்பிட்டேன்.
இது எல்லாவற்றுக்கும் மேலாக, உங்கள் அனைவருக்கும் தெரியும். கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம். செப்டம்பர் 15ஆம் தேதியோடு கிட்டத்தட்ட இரண்டு வருடம் ஆகிவிட்டது. இந்த திட்டம் மூலம் கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் ஒவ்வொரு மாதமும் 1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் நம்முடைய தலைவர் அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக கொடுத்திருக்கிறார்கள். இந்த மாதத்திற்கான உரிமைத்தொகை இன்றைக்கோ நேற்றோ உங்கள் வங்கி கணக்கில் வந்திருக்கும்.
அதுமட்டுமல்ல, சில இடங்களில் குறைகள் இருந்தது. எங்களுக்கு கிடைக்கவில்லை, விடுபட்டுபோனது என்று, உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தினோம், அதில் பார்த்தீர்கள் என்றால் 40 சதவீத மனுக்கள் மகளிர் உரிமைத் தொகை வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருந்தார்கள். நம்முடைய முதலமைச்சர் சில தளர்வுகளை செய்திருக்கிறார்கள். நிச்சயம் ஓரிரு மாதங்களில் தகுதியான கூடுதலான மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை நிச்சயம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் உறுதியளித்திருக்கிறார்.
எனவே, மகளிர் முன்னேற்றம், மாணவர்கள் முன்னேற்றம், தொழில் முன்னேற்றம் என்று ஒவ்வொரு துறைக்கும் பார்த்து, பார்த்து நம்முடைய முதலமைச்சர் செய்து கொண்டிருக்கிறார். இதுவரை, சுய உதவிக் குழுக்களுக்கான கடன்கள், வங்கி கடன் இணைப்புகள் என்று 1 லட்சம் கோடிக்கும் அதிகமான வங்கிக்கடன் இணைப்புகள் வழங்கி இருக்கின்றோம். இதை எல்லாம் நம்முடைய முதலமைச்சர், உங்களுக்கு வழங்கப்படுகிற கடன் தொகையாக பார்க்கவில்லை, உங்கள் உழைப்பின் மீது வைத்துள்ள நம்பிக்கைத் தொகையாக தான் பார்க்கிறார்கள்.
இது பொறுக்காமல், சில பேர் பல விமர்சனங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கலர் பஸ் எடுத்துக் கொண்டு போகிறார்கள். ஒருத்தர் பச்சை கலர் பஸ், ஒருத்தர் மஞ்சள் கலர் பஸ். ஆனால், நான் சொல்கின்றேன் கடைசியாக எல்லாத்தையும் ஓவர்டேக் செய்து ஜெயிக்கப்போகின்றது பிங் கலர் பஸ்தான். மகளிர் நீங்கள் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கின்ற முதலமைச்சருடைய அந்த பஸ் தான் ஜெயிக்கப் போகின்றது.
உங்களுக்காக உழைப்பதற்காக நம்முடைய அரசு, நம்முடைய முதலமைச்சர் தயாராக இருக்கின்றார்கள். இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்று இருக்கின்றார்கள். ஆகவே, திராவிட மாடல் அரசினுடைய சாதனைகள் தொடர, 2026-லும் நம்முடைய முதலமைச்சர் தொடர்ந்து இந்த அரசை அமைப்பதற்கு வந்திருக்கக்கூடிய மகளிர் உங்களுடைய ஆதரவை நீங்கள் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டு, இந்த விழாவை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்த மாவட்ட அமைச்சர் அண்ணன் இராஜேந்திரன், மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்திற்கும் என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என கூறினார்.
இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.எம். செல்வகணபதி, கே.இ.பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர் எஸ். சதாசிவம், இரா. அருள், மாநகராட்சி மேயர் ஆ. இராமச்சந்திரன், மாநகராட்சி துணை மேயர் மா. சாரதாதேவி, ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆர்.வி.ஷஜீவனா இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), நே. பொன்மணி, இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் மா. இளங்கோவன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா. ரவிக்குமார், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வாணி ஈஸ்வரி, அன்னை தெரசா மகளிர் சுய உதவிக்குழுவின் உறுப்பினர் சி.கவிதா, செல்வ விநாயகா மகளிர் சுய உதவிக் குழுவின் உறுப்பினர் பூ.சரஸ்வதி உள்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் உடனிருந்தனர்.