குரூப் 5ஏ பணிகளில் காலியாக உள்ள 32 பணியிடத்துக்கான அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி: நவ.5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை: குரூப் 5ஏ பணிகளில் காலியாக உள்ள 32 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-குரூப் 5ஏ பணிகள் தலைமை செயலகம் (சட்டம் மற்றும் நிதித்துறைகள் நீங்கலாக) உதவி பிரிவு அலுவலர் 22 இடங்கள், நிதித்துறையில் உதவி பிரிவு அலுவவலர் 3 இடம், தலைமை செயலகம் (சட்டம் மற்றும் நிதித்துறைகள் நீங்கலாக) உதவியாளர் 5 இடங்கள், நிதித்துறை உதவியாளர் 2 இடங்கள் என 32 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் கோபால சுந்தரராஜ் வெளியிட்ட அறிவிப்பு: ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி 5ஏ பணிகளுக்கான அறிவிப்பு தேர்வாணையத்தால் 2025ம் ஆண்டிற்கான ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்டவாறு இன்று (நேற்று) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் நவம்பர் 5ம் தேதி வரை தேர்வாணைய இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு டிசம்பர் 21ம் தேதி நடைபெறும். தேர்வர்கள் தேர்வுக்கட்டணத்தை யுபிஐ மூலமாகவும் செலுத்தலாம். தொடர்ச்சியாக 14வது முறையாக தேர்வாணையத்தின் ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்ட தேதியில் தேர்விற்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் தவறாமல் வெளியிடப்பட்டுள்ளது.
2018 முதல் 2025 வரையுள்ள 8 ஆண்டுகளில் முதன்முறையாக தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் (2024 மற்றும் 2025), ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி 5ஏ பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி 5ஏ பணிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தோராயமானதாகும். மேலும் அரசுத்துறைகளிடமிருந்து அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்விற்கு முன்பாக மேலும் அதிகரிக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.