குரூப் 2, 2ஏ பதவியில் 645 காலி பணியிடம் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றுடன் அவகாசம் முடிகிறது: 4.46 லட்சம் பேர் இதுவரை விண்ணப்பம் டிஎன்பிஎஸ்சி தகவல்
சென்னை: குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக கால அவகாசம் இன்றுடன் முடிகிறது. இதுவரை இத்தேர்வுக்கு 4.46 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2ஏ பதவியில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 15ம் தேதி வெளியிட்டது. இதில் குரூப் 2 பணியில்50 இடங்கள் இடம் பெற்றுள்ளன. குரூப் 2ஏ பதவியில் 31 துறையில் 595 இடங்கள் நிரப்பப்படுகிறது.
குரூப் 2, 2ஏ தேர்வுக்கு அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் டிஎன்பிஎஸ்சியின் இணையதளம் (www.tnpscexams.in) வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இளங்கலை பட்டப்படிப்பு கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இத்தேர்வுக்கு இளங்கலை பட்டதாரிகள் மட்டுமின்றி, முதுநிலை பட்டதாரிகள், இன்ஜினீயர் என்று போட்டு போட்டு விண்ணப்பித்து வந்தனர்.
நேற்று வரை இத்தேர்வுக்கு 4 லட்சத்து 46 ஆயிரத்து 98 பேர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட சுமார் ஒரு மாதம் காலம் அவகாசம் இன்று நள்ளிரவு 11.59 மணியுடன் முடிவடைகிறது. இன்று கடைசி நாள் என்பதால் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தொடர்ந்து விண்ணப்பங்களில் திருத்தங்களை செய்ய ஆகஸ்ட் 18 தேதி முதல் முற்பகல் 12.01 மணி முதல் ஆகஸ்ட் 20ம் தேதி பிற்பகல் 11.59 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குரூப் 2, குரூப் 2ஏ காலி பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. இப்பதவிக்கான முதல்நிலை தேர்வு செப்டம்பர் 28ம் தேதி நடைபெறுகிறது. இதில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தக்கட்டமாக மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.