4.18 லட்சம் பேர் எழுதிய குரூப் 2, 2ஏ தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தகவல்
சென்னை: குரூப் 2, 2ஏ தேர்வுக்கான உத்தேச விடைகளை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி)குரூப்-2, 2ஏ பதவிகளில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை கடந்த 28ம் தேதி நடத்தியது. இத்தேர்வை எழுத 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில் 4 லட்சத்து 18 ஆயிரத்து 791 பேர் தேர்வு எழுதினர். இதனால், ஒரு பதவிக்கு 649 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான பொதுத்தமிழ், பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவுக்கான உத்தேச விடைகளை டிஎன்பிஎஸ்சி நேற்று தனது இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிட்டுள்ளது.
இந்த உத்தேச விடைகளின் மீது முறையீடு செய்ய விரும்பும் தேர்வர்கள் உத்தேச விடைகள் வெளியிட்ட நாளில் இருந்து ஏழு நாட்களுக்குள், அதாவது வருகிற 14ம் தேதி மாலை 5.45 மணிக்குள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள
‘‘ஆன்சர் கீ சேலேஜ் ’’என்ற சாளரத்தை பயன்படுத்தி மட்டுமே முறையீடு செய்யலாம். இதற்கான வழிமுறைகள் தேர்வாணைய இணையதளத்திலேயே வழங்கப்பட்டுள்ளன. அஞ்சல் வழியாகவும், மின்னஞ்சல் வழியாகவும் பெறப்படும் முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.