துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவிக்கான மெயின் தேர்வு வரும் 1ம் தேதி ெதாடக்கம்: டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு
சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 70 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் 1ம் தேதி வெளியிட்டது. இதில் துணை கலெக்டர் 28 இடங்கள், போலீஸ் டிஎஸ்பி 7 இடம், வணிகவரி உதவி ஆணையர் 19, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் 7, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 3, தொழிலாளர் நல உதவி ஆணையர் 6 ஆகிய 70 பணியிடங்கள் அடங்கும். அதோடு உதவி வனப் பாதுகாவலர் 2 காலியிடங்களுக்கான குருப் 1 ஏ அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இத்தேர்வுக்கான முதல்நிலை தேர்வுக்கு 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி நடந்தது. இத்தேர்வை 1 லட்சத்து 86,128 பேர் மட்டுமே எழுதினர். இதற்கிடையில் குரூப் 1 பதவிக்கான காலி பணியிடங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டது. அதாவது ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் காலி பணியிடங்களுக்கான எண்ணிக்கை 7லிருந்து 15 ஆக அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து குரூப் 1 காலி பணியிடங்களின் எண்ணிக்கை 78 உயர்ந்தது.
இந்த நிலையில் முதல்நிலை தேர்வுக்கான ரிசல்டை டிஎன்பிஎஸ்சி கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி வெளியிட்டது. இதில் தற்காலிகமாக 1843 பேர் மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான மெயின் தேர்வு(விரிந்துரைக்கும் வகை) வருகிற 1ம் தேதி முதல் 4ம் தேதி வரையும் மற்றும் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரையும் நடைபெற உள்ளது. மெயின் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும். இந்த நிலையில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களிள் தேர்வுக்கூட நுழைவு சீட்டு தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.