கிரவுண்டே இல்லாமல் மேட்ச் விளையாடி இருக்காங்க... பீகார் தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்துக்கு தோல்வி: இந்தியாவுக்கு பேராபத்து: வீரபாண்டியன் பேட்டி
திருச்சி: ‘இந்தியாவை பேராபத்து சூழ்ந்திருப்பதை தமிழக மக்கள் அறிவார்கள். பீகார் தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்துக்கான தோல்வி. வரும் 2026 தேர்தலில் நல்லதொரு தீர்ப்பு அளிப்பார்கள்’ என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறியுள்ளார். திருச்சி திருவெறும்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பீகார் தேர்தலில் பாஜ வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஜனநாயகம் தோல்வி அடைந்திருக்கிறது.
ஆடுகளம் இல்லாமல் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். போட்டியே இல்லாமல் கோப்பை வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் ஏறத்தாழ ஒன்றிய அரசுடன் முடங்கி உள்ளது. நீதிமன்றம் தனது நீதியை மூடி உள்ளது. இது ஒன்றிய அரசு ஜனநாயகத்தின் மீது தொடுத்த தாக்குதல் என்று கருதுகிறோம். காங்கிரஸ் பலமுறை தேர்தலில் தோல்வியுற்றுள்ளது. அதனை ஒப்புக்கொண்டுள்ளது. 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள்.
அதில் சிறுபான்மை மக்கள் தான் அதிகம். ஆனால் தேர்தல் முறையை சிதைக்கின்ற வகையில் மாநில அரசும் ஒன்றிய அரசும் நடந்து கொள்வது ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல. இதே போன்ற வெற்றியை மேற்கு வங்கத்திலும், தமிழகத்திலும் கணிப்பது சரியல்ல. இங்கே ஆடுகளம் வேறு. இது திராவிடத்தால் செதுக்கப்பட்ட மண். மத நல்லிணக்கம் கொண்ட மக்களை பிரிப்பதற்கு இங்கு இடமில்லை. எஸ்ஐஆர் எடுத்த எடுப்பிலேயே தோல்வி அடைந்துள்ளது.
எஸ்ஐஆர் பற்றி தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று நிறுத்தி வைக்க வேண்டும். குறுவை பயிர் பாதிக்கப்பட்ட நிலங்களை ஒன்றிய அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய தொகை இன்னும் வழங்கவில்லை. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை ஒன்றிய அரசு குறி வைத்து நிதியை முடக்குகிறது. ஒன்றிய அரசு அதிகாரத்தை குவித்து வைத்திருக்கிறது. பேராபத்து இந்தியாவில் சூழ்ந்து இருப்பதை தமிழக மக்கள் உணர்வார்கள். அதனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் நல்லதொரு தீர்ப்பு அளிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.