தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் குடியரசு துணைத் தலைவராக தேர்வானது மகிழ்ச்சி தருகிறது: ஓ.பன்னீர்செல்வம்
சென்னை: தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் குடியரசு துணைத் தலைவராக தேர்வானது மகிழ்ச்சி தருகிறது என அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இரண்டு முறை நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு திறம்பட பணியாற்றியவரும், ஐக்கிய நாடுகள் சபைக்கான நாடாளுமன்றக் குழு, பொது நிறுவனங்கள் குழு, நிதிக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழு ஆகியவற்றில் உறுப்பினராக பணியாற்றிய அனுபவம் உடையவரும், அகில இந்திய கயிறு வாரியத்தின் தலைவராக பணியாற்றிய பெருமைக்குரியவரும்.
ஜார்க்கண்ட் மாநில ஆளுநர், மகாராஷ்டிர மாநில ஆளுநர் போன்ற பதவிகளை சிறப்புற வகித்தவரும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான C.P. ராதாகிருஷ்ணன் இந்தியக் குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதற்கு எனது பாராட்டுகள். நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் இந்தியக் குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்க இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. C.P. ராதாகிருஷ்ணன் பணி சிறக்க எனது நல்வாழ்த்துகள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.