பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் குமரியில் 3.70 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி
*நடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்
நாகர்கோவில் : கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மிடாலம் ஊராட்சியின் நாற்றங்கால் பண்ணையை கலெக்டர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊரக பகுதிகளில் பசுமையை அதிகரிக்கவும், புவி வெப்பமடைதலை தடுத்திடவும் வட்டார நாற்றங்கால் பண்ணைகள் மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் வனத்துறையுடன் ஒருங்கிணைந்து நாற்றங்கால் பண்ணைகளில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
6 அடி உயரத்திற்கு மேல் வளர்ந்த மரக்கன்றுகளை ஊரக பகுதிகளில் சாலையோரங்கள், அரசு நிறுவனங்கள், கடற்கரை பகுதிகள், ஆறு மற்றும் குளக் கரைகள், நீர்நிலைகள் மற்றும் ஊராட்சிக்குட்ட இடங்களில் தொகுப்பாக நடுவதற்கு இடங்கள் தேர்வு செய்ய சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையரால் அறிவுறுத்தப்பட்டது.
அதனடிப்படையில் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மிடாலம் ஊராட்சியின் நாற்றங்கால் பண்ணையில் வளர்க்கப்பட்டு வரும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் பார்வையிடப்பட்டது.
குமரி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2024-25ம் ஆண்டில் 18 வட்டார, கூடுதல் வட்டார நாற்றங்கால் பண்ணைகளில் 35 ஆயிரத்து 680 மரக்கன்றுகளும், பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் வனத்துறையுடன் ஒருங்கிணைந்து 9 நாற்றங்கால் பண்ணைகளில் 90 ஆயிரம் மரக்கன்றுகளும் வளர்க்கப்பட்டு வருகிறது.
மேலும் 2025-26, 2026-27 மற்றும் 2027-28-ம் ஆண்டுகளுக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு 30 ஆயிரம் மரக்கன்றுகள் வீதம் 9 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 2 லட்சத்து 70 ஆயிரம் மரக்கன்றுகளும், பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் வனத்துறையுடன் ஒருங்கிணைந்து நாற்றங்கால் பண்ணைகளில் 1 லட்சம் மரக்கன்றுகளும் உற்பத்தி செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மரக்கன்றுகள் வளர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது 2024-25ம் நிதியாண்டில் நாற்றங்கால் பண்ணைகளில் வளர்க்கப்பட்ட மரக்கன்றுகளில் 5-6 அடி மற்றும் 6 அடி உயரத்திற்கு மேல் வளர்ந்த மரக்கன்றுகளை ஊரக பகுதிகளில் நடுவதற்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மரக்கன்றுகள் நடுவதற்கு முன்னேற்பாடுகள் மற்றும் குழி தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.