தனது கிராஸ் ரூட் பட தயாரிப்பு நிறுவனம் இனி படத்தை தயாரிக்க போவதில்லை: இயக்குநர் வெற்றிமாறன் அறிவிப்பு!
சென்னை: இனி திரைப்படங்கள் தயாரிக்க போவதில்லை என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். கிராஸ் ரூட் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் இயக்குநர் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே மற்றும் அனல் மேலே பனித்துளி உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். இதையடுத்து நடிகை ஆன்ட்ரியா நடித்துள்ள மனுஷி திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. படத்தை இயக்குனர் கோபி நயினார் இயக்கியுள்ளார்.
படத்தில் 37 ஆட்சேபகரமான காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றுள்ளதாகக் கூறி அந்த காட்சிகள், வசனங்களை நீக்க சென்சார் போர்டு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பட தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். விசாரணையில் கடந்த 29ம் தேதி விசாரணையில் மனுஷி படத்தில் சில காட்சிகளை நீக்கி 2 வாரத்தில் தணிக்கை குழுவுக்கு அனுப்புமாறு ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து பேட் கேர்ள் திரைப்படமும், தணிக்கைத் துறையில் பல சிக்கல்களைச் சந்தித்தன. இந்த அனுபவம் அவருக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தனது கிராஸ் ரூட் பட தயாரிப்பு நிறுவனம் இனி படத்தை தயாரிக்க போவதில்லை என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். மேலும், என்னை போன்றோர் திரைப்படங்கள் தயாரிப்பது எளிதான விஷயம் கிடையாது. பல நேரம் கடன் வாங்கித்தான் படம் எடுக்கிறோம். தயாரிப்பாளராக இருப்பது மிகவும் அழுத்தம் நிறைந்தது. இதற்கு முன் தயாரித்த மனுஷி படம் கோர்ட்டுக்கு போனது. பேட் கேர்ள் படத்திற்கும் நிறைய சவால்கள் இருந்தன. எனவே எனது கிராஸ் ரூட் பட தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் கடைசி திரைப்படம் BAD GIRL. இனி கிராஸ் ரூட் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து படங்கள் வெளிவராது என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழ் திரையுலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.