தமிழ்நாட்டின் 35வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: தமிழ்நாட்டில் இருந்து கிராண்ட் மாஸ்டர் தகுதியைப் பெற்றிருக்கும் 35வது வீரரான இளம்பரிதிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் 35வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதியை வாழ்த்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவு: தமிழ்நாட்டில் இருந்து கிராண்ட் மாஸ்டர் தகுதியைப் பெற்றிருக்கும் 35வது வீரரான இளம்பரிதி செஸ் விளையாட்டில் நமது ஆளுகையை மேலும் ஒளிவீசிடச் செய்துள்ளார்.
மதிநுட்பத்தால் போராடி வரலாறு படைத்து, கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்று, தமிழ்நாட்டின் வாகையர் மகுடத்தில் மற்றுமொரு வைரமாக இளம்பரிதி சேர்ந்துள்ளார். தமிழ்நாட்டின் செஸ் களத்தின் மீது எழுஞாயிறு உதயமாகி வரும் நிலையில், நம்பிக்கையளிக்கும் அனைத்தையும் வெற்றிகளாக திராவிட மாடல் மாற்றிக் காட்டும். மேலும் பல கிராண்ட்மாஸ்டர்கள் உருவாகி வருவார்கள்.இவ்வாறு முதல்வர் எக்ஸ்தள பதிவில் கூறியுள்ளார்.
