24 கிராண்ட்ஸ்லாம் வென்ற ஜாம்பவான் ஜோகோவிச்சுக்கு என்ன ஆச்சு? சின்சினாட்டி டென்னிசில் விலகல்
சின்சினாட்டி: அமெரிக்காவில் துவங்கவுள்ள சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து, செர்பியாவை சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் விலகியுள்ளார். செர்பியாவை சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் (38). 24 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர். சமீபத்தில் நடந்த விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் அரை இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியை சேர்ந்த ஜானிக் சின்னரிடம் தோல்வியை தழுவினார்.
அதன் பின் வேறு போட்டிகளில் கலந்து கொள்ளாத ஜோகோவிச், சின்சினாட்டி ஓபன் டென்னிசில் பங்கேற்பார் என கூறப்பட்டது. ஆனால், மருத்துவம் அல்லாத காரணங்களுக்காக, வரும் 9ம் தேதி துவங்கவுள்ள சின்சினாட்டி போட்டியில் இருந்து விலகிக் கொண்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் முடிந்த கனடா ஓபன் டென்னிஸ் போட்டிகளில் கூட ஜோகோவிச் கலந்து கொள்ளவில்லை. அவர், வரும் 24ம் தேதி துவங்கவுள்ள, அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் நேரடியாக பங்கேற்பார் என கூறப்படுகிறது.