கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டி உற்சாக துவக்கம்: பிரக்ஞானந்தா, குகேஷ் பங்கேற்பு
சமர்கண்ட்: உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில், ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டிகளின் துவக்க விழா நேற்று உற்சாகமாக நடந்தது. கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டிகள், 11 சுற்றுகள் கொண்ட தொடராக, ஓபன் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளாக நடத்தப்பட உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள், அடுத்தாண்டு நடக்கும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவர். கேண்டிடேட்ஸ் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனை, தற்போதைய உலக செஸ் சாம்பியனுடன், உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் களம் காண்பர்.
கிராண்ட் ஸ்விஸ் ஓபன் பிரிவில், இந்தியாவை சேர்ந்த உலக சாம்பியன் குகேஷ், இந்திய வீரர்கள் அர்ஜுன் எரிகேசி, பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி, நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரி, அமெரிக்க வீரர் லெவோன் ஆரோனியன், ஜெர்மனி வீரர் வின்சென்ட் கீமர் உள்பட 116 வீரர்கள் பங்கேற்கின்றனர். சமீபத்தில் நடந்த சின்கியுபீல்ட் செஸ் போட்டியில் சிறப்பாக ஆடி 2ம் இடம் பிடித்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா, ஃபிடே தரவரிசை பட்டியலில் 4ம் இடத்துக்கு முன்னேறினார். அவரது சமீபத்திய வெற்றிகள் காரணமாக, கேண்டிடேட்ஸ் போட்டிக்கு அனேகமாக தகுதி பெற்று விடுவார் என கூறப்படுகிறது.
மகளிர் பிரிவில், இந்திய வீராங்கனைகள் ஹரிகா துரோணவல்லி, வைஷாலி, வந்திகா அகர்வால், சீன வீராங்கனை டான் ஜோங்ஜி, உக்ரைன் வீராங்கனை அன்னா முசிசுக் உள்ளிட்ட 56 பேர் கலந்து கொள்கின்றனர். இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக், ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரா கோர்யச்கினா ஆகியோர் ஓபன் பிரிவில் களமிறங்க உள்ளனர். கிராண்ட் ஸ்விஸ் போட்டிகளில், உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன், டிங் லிரென், விஸ்வநாதன் ஆனந்த், பேபியானோ கரவுனா, ஹிகாரு நகமுரா ஆகிய முன்னணி வீரர்கள் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஓபன் பிரிவில் முதலிடம் பிடித்து வெற்றி பெறும் வீரருக்கு ரூ.80 லட்சம் பரிசு கிடைக்கும். ஓபன் பிரிவு மொத்த பரிசுத் தொகை, ரூ.5.5 கோடி. நேற்றைய துவக்க விழா முடிந்த பின், ஓபன், மகளிர் பிரிவில் மோதும் வீரர், வீராங்கனைகள் தொடர்பான அட்டவணை வெளியானது. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு முதல் சுற்று போட்டிகள் துவங்கும்.