கொய்யாவில் கூடுதல் விளைச்சலுக்கு சில வழிமுறைகள்!
கிராமத்து சாலையோரம் தொடங்கி பெருநகரங்களின் பஸ் நிலையம், ரயில் நிலையம் வரை பல இடங்களில் விற்பனை செய்யப்படும் கொய்யாக்கனி குறித்து அதிக விளக்கம் தரத் தேவையில்லை. ஏழை களின் ஆப்பிள் என்று வர்ணிக்கப்படும் பல்வேறு சத்துகள் மிகுந்த கொய்யாப்பழங்களுக்கு எப்போதும் மார்க்கெட்டில் தனி மவுசு இருக்கிறது. இத்தகைய கொய்யாவை சாகுபடி செய்கையில் சில யுக்திகளைக் கையாண்டால் அதிக மகசூல் எடுக்கலாம்.
கொய்யா ரகங்கள்
கொய்யாவில் பல ரகங்கள் உள்ளன. அவற்றில் லக்னோ 49, அலகாபாத் சபேதா, அரிஜா, ஆப்பிள், பனாராசி, அர்கா, மிர்துளா, அர்கா அமுல்யா, சிட்டிடார், ரெட்பிளஸ், சபேத் ஜாம், கோகிர் சபேதா, லலித், ஸ்வேதா போன்ற ரகங்களை நாம் பயிரிடலாம்.
நிலம் தயாரிப்பு
எந்தப் பயிராக இருந்தாலும் உழவு மிக முக்கியம். உழவைப் பொருத்துதான் பயிர்களின் வேர் உறுதியாகி சத்துகளைக் கிரகித்து மகசூலைத் தரும். அந்த வகையில் கொய்யா பயிரிட இருக்கும் நிலங்களை இரண்டு முதல் நான்கு முறை உழுது 0.6 மீ ஆழம் மற்றும் அகலம் என்ற அளவில் குழிகளை தோண்டி மேல் மண்ணுடன் 20 கிலோ தொழுஉரம், 500 கிராம் சூப்பர் பாஸ்பேட் கொண்டு நிரப்ப வேண்டும். கன்றுகளை குழியின் நடுவே நட்டு மண்ணால் அணைப்பு செய்யப்பட வேண்டும். பருவமழை தொடங்கும் போது நடவு செய்ய வேண்டும்.
அடர் நடவு
நிலத்தின் தன்மை, மண்வளம், நடவு முறை ஆகியவற்றைப் பொறுத்து நடவு இடைவெளியானது 6க்கு 6 மி.மீ, இருக்கும் வகையில் அமைக்க வேண்டும். அதாவது ஏக்கருக்கு 112 செடிகள் வரை நடலாம். எனினும், இது பொதுவாக 3.6 மீட்டரில் இருந்து 5.4 மீட்டர் இடைவெளியில் நடப்படுகிறது. இதில் பழத்தின் எடை மற்றும் அளவு குறைவாக இருந்தாலும் ஒரு மரத்தின் பழங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
நீர் மேலாண்மை
பொதுவாக, கொய்யா மரங்களுக்கு நீர் பாசனம் தேவையில்லை. ஆனால், தொடக்க நிலையில் இளஞ்செடிகளுக்கு ஒரு ஆண்டுக்கு 8 முதல் 10 முறை நீர்ப்பாசனம் அவசியம். முழு வளர்ச்சி தாங்கிய மரங்களுக்கு மே - ஜூலை மாதத்தில் வாராந்திர இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டும். சொட்டு நீர் பாசனம் மிகவும் உகந்தது. இதன்மூலம் 60 சதவிகிதம் தண்ணீர் சேமிப்பதுடன் பழத்தின் எடை மற்றும் அளவு கணிசமாக அதிகரிக்கும்.
உரம் மற்றும் சத்து மேலாண்மை
100 கிராம் தழைச்சத்து, 40 கிராம் மணிச்சத்து மற்றும் 40 கிராம் பொட்டாஷ் ஆகிய உரங்களை செடிகளை நட்ட 6 வது ஆண்டில் கொடுக்க வேண்டும். தழைச்சத்து, பொட்டாஷ் மற்றும் சாம்பல் சத்தினை இரண்டு பாகங்களாக முறையே ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அளிக்க வேண்டும்.
நுண்ணூட்ட சத்துக்கள்
பூக்கள் பூப்பதற்கு முன் போரிக் அமிலம் (0.1) மற்றும் ஜிங்க் சல்பேட் போன்ற கலவைகளை இலை வழியாக தெளிப்பதன் மூலம் பழத்தின் அளவு மற்றும் மகசூலை அதிகரிக்க முடியும். காப்பர் சல்பேட் (0.20.4) தெளிப்பதன் மூலம் தாவரங்களின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கலாம்.
பின்செய் நேர்த்தி
மற்ற பயிர்களைப் போலவே கொய்யாவிலும் களைச்செடிகளால் பாதிப்பு ஏற்படும். களைகளால் 30 முதல் 40 சதவிகிதம் வரை மகசூல் குறைய வாய்ப்பு ஏற்படும். களைக்கொல்லியாக கிராமக்சோன் தெளிக்க வேண்டும். பழத்தோட்டத்தில் மண் வளத்தை மேம்படுத்த 2 முதல் 3 முறை நிலத்தினை உழ வேண்டும். மேலும், ஆண்டுக்கு 2 முறை மூடாக்கு காகித விரிப்பு மூலம் களைகள் மற்றும் மண்ணின் ஈரத்தன்மையை பாதுகாக்கலாம்.
ஊடுபயிர்கள்
பயறு வகை பயிர்களான பச்சைப்பயிர், உளுந்து, தக்காளி மற்றும் பீட்ரூட் ஊடுபயிர்களாக தொடக்க காலகட்டங்களில் பயிரிடுவதன் மூலம் அதிக வருமானம் பெறலாம். சாம்பல் பூசணி, வெள்ளரி, அன்னாசி, பீன்ஸ், முட்டைகோஸ் போன்ற பயிர்களை ஊடுபயிராக பயிரிடலாம்.
கவாத்து மற்றும் சீரமைப்பு
கொய்யா மரங்களில் கவாத்து செய்வதன் மூலம் பழத்தின் தரம் மற்றும் மகசூலை அதிகரிக்க முடியும். காய்களை தாங்குவதற்கு ஏற்ப கிளைகளின் வலுவான கட்டமைப்பை உருவாக்குகிறது. இதற்காக, தரைமட்டத்தில் இருந்து வெளியே வரும் தளிர்களை 30 செ.மீ வரை துண்டிக்க வேண்டும். மேலும், 4 தூக்கு கிளைகளை வளரவிட்டு நடுப்பகுதியை திறக்க வேண்டும்.
(இதன் தொடர்ச்சி அடுத்த இதழில் இடம்பெறும்)