ஆன்லைன் விளையாட்டால் கடன் சுமை; சமையல் ‘காஸ்’-ஐ சுவாசித்து அரசு ஊழியர் தற்கொலை: மத்திய பிரதேசத்தில் பயங்கரம்
போபால்: மத்தியப் பிரதேசம், ஹர்தா மாவட்டத்தைச் சேர்ந்த லக்ஷ்மிநாராயண் கேவத் (35) என்பவர், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையில் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுமார் 9.30 மணியளவில், இவர் தனது வாடகை வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த காவல்துறையினர், அவரது உடலைக் கைப்பற்றினர். அப்போது, சமையல் காஸ் சிலிண்டரின் திருகு திறந்த நிலையிலும், அதன் குழாய் நேரடியாக அவரது வாயிலும் வைக்கப்பட்டிருந்தது. அதிகப்படியான சமையல் காஸ்-ஐ சுவாசித்ததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். குடலுக்குள் காஸ் சென்றதால், அவரது உடல் முற்றிலும் விறைத்துப் போயிருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த லக்ஷ்மி நாராயண் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி இருந்தது தெரியவந்துள்ளது. இதனால், அவருக்கு லட்சக்கணக்கான ரூபாய் கடன் ஏற்பட்டிருக்கிறது. இந்தக் கடன் சுமையால் ஏற்பட்ட நிதி நெருக்கடியும், மன அழுத்தமும் அவரை இந்த விபரீத முடிவை எடுக்கத் தூண்டியிருக்கலாம் என நம்பப்படுகிறது. இதுகுறித்து உயிரிழந்தவரின் மூத்த சகோதரர் கூறுகையில், ‘எனது சகோதரரின் அருகில் வசிக்கும் என் சகோதரிதான், லக்ஷ்மிநாராயண் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்தார். அங்கு சென்று பார்த்தபோது, காஸ் சிலிண்டர் குழாய் அவரது வாயில் வைக்கப்பட்டிருந்த கொடூரமான காட்சியைக் கண்டோம்’ என்றார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.