ஆய்வுக்கு சென்ற இடத்தில் அத்துமீறல் அரசு அதிகாரி மீது பாலியல் புகார்: மகளிர் போலீசார் விசாரணை
நெல்லை: நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறையின் திட்ட இயக்குநர் மீது, களக்காடு மகளிர் திட்ட மையத்தின் பெண் மேலாளர் பாலியல் அத்துமீறல் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. களக்காடு மகளிர் திட்டத்தின் கீழ் செயல்படும் பாலின வள மையத்தில் மேலாளராக பெண் அதிகாரி ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று, நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக சமூக நலத்துறையின் திட்ட இயக்குநரான இலக்குவன் மீது பரபரப்பு பாலியல் புகார் அளித்தார்.
அதில், கடந்த மாதம் 25ம்தேதி காலை களக்காடு யூனியன் அலுவலகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் பெண் அதிகாரி பணியில் இருந்தபோது, திட்ட இயக்குநர் இலக்குவன் முன்னறிவிப்பின்றி திடீர் ஆய்வு நடத்த வந்துள்ளார் என அவர் குறிப்பிட்டார். இலக்குவன் அலுவலகப் பதிவேடுகளைச் சரிபார்த்த பிறகு, அந்த பெண் அதிகாரியின் குடும்பச் சூழ்நிலையைப் பற்றி விசாரித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், மேற்படிப்புக்கு உதவுவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். பின்னர், அலுவலகத்தில் இரண்டு கட்டில்கள் போடப்பட்டிருந்த அறைக்குச் சென்ற இலக்குவன், பாலியல் நோக்கத்துடன் பெண் அதிகாரியின் வலது கையைப் பிடித்து இழுத்து அத்துமீறலில் ஈடுபட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரிடமிருந்து கையைத் தட்டிவிட்டு வெளியேறிய பெண் அதிகாரியிடம், ``இங்கு நடந்ததை யாரிடமும் சொல்ல வேண்டாம்’’ என்று இலக்குவன் மிரட்டியதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பிஎன்எஸ் பிரிவு 354-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பேக்டர் மங்கையர்க்கரசி விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.