ஆளுநர் ரவி மீண்டும் டெல்லி பயணம்
மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து புதுடெல்லிக்கு கடந்த 20ம் தேதி 4 நாள் பயணமாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்கெனவே புறப்பட்டு சென்றிருந்தார். அங்கு ஒன்றிய விவசாயத்துறை அமைச்சர் சந்தித்து பேசினார். அப்போது தமிழக விவசாயிகளின் நிலை குறித்து விளக்கி பேசியதாக, தனது வலைதளப் பக்கத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டிருந்தார். பின்னர் டெல்லியில் 4 நாள் பயணத்தை முடித்து, நேற்று மாலை விமானம் மூலமாக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னைக்குத் திரும்பியிருந்தார்.
இந்நிலையில் அவருக்கு நேற்றிரவு டெல்லியிலிருந்து அவசர அழைப்பு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இன்று காலை 8.55 மணியளவில் ஏர்இந்தியா பயணிகள் விமானம் மூலமாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு நாள் பயணமாக மீண்டும் புதுடெல்லிக்குப் புறப்பட்டு சென்றார். அவருடன் தனி செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி உடன் சென்றனர். பின்னர் டெல்லியிலிருந்து இன்றிரவு 10.30 மணியளவில் ஏர்இந்தியா விமானம் மூலமாக சென்னைக்குத் திரும்புகிறார். இது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பயணிகளுடன் காலை 8.55 மணியளவில் புதுடெல்லிக்கு புறப்பட வேண்டிய ஏர்இந்தியா பயணிகள் விமானம் திடீரென காலதாமதமாகப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த விமானம் சுமார் ஒன்றேகால் மணி தாமதமாக, காலை 10.15 மணியளவில் சென்னையில் இருந்து புதுடெல்லிக்குப் புறப்பட்டு சென்றது.